உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் வளர்ச்சி இருக்கிறது; வேலை இருக்கிறதா?

தங்களது ஆட்சியில், தமிழகத்தின் ஜி.டி.பி., ஆண்டுக்கு 11.19 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்றும், கடந்த ஐந்தாண்டுகளில், இங்கு 3.35 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்துள்ளன என்றும் தி.மு.க., பெருமை பேசி பிரசாரம் செய்கிறது. ஆனால், தமிழகத்தில் வேலை செய்யும் வயதில் உள்ள ஐந்து கோடி பேருக்கு இது போதுமா?தொழில் துறை வளர்ச்சியிலும், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழகம் சிறந்த மாநிலமாக, தி.மு.க., ஆட்சியில் மட்டும் அல்ல நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.இதனால், நாட்டில் எப்போதெல்லாம் பொருளாதார வளர்ச்சி சூழல் உருவாகிறதோ, அப்போதெல்லாம், அதில் ஒரு கணிசமான பகுதி தமிழகத்தில் ஏற்படுகிறது. வளர்ச்சி கணிசமாக இருந்தாலும், பல்வேறு துறைகளில் வேலை செய்வோரின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை என்றே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2012ல், தமிழகத்தின் வேலைவாய்ப்பில், 43 சதவீதமாக இருந்த விவசாயத்தின் பங்கு, 2025ல் 22 சதவீதமாக குறைந்துவிட்டது.இன்றைய நிலையில், தமிழகத்தில் ஏதேனும் ஒரு வேலை செய்வோரில், ஐ.டி., துறையில் - 30 சதவீதம், கார் உற்பத்தியில் - 18 சதவீதம், எலக்ட்ரானிக்ஸ் துறையில் - 10 சதவீதம், ஜவுளி துறையில் - 10 சதவீதம், கட்டுமானம் உள்ளிட்ட மற்ற துறைகளில் மீதமுள்ளோர் வேலை செய்கின்றனர்.இவர்களில், முறையான வேலையில் - 20 சதவீதம், முறைசாரா வேலையில் - 80 சதவீதம் பேர் உள்ளனர். அரசு வேலையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.அரசு வேலை தவிர்த்து மற்றவர்களுக்கெல்லாம் போதுமான வருமானம் கிடைக்கிறதா?திருத்தி அமைக்கப்பட்டிருக்கும் தொகுப்பூதிய சட்டம், குறைந்தபட்ச ஊதியத்தை கணிக்க சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றின் அடிப்படையில், என் கணிப்பின்படி, தமிழகத்தில், குறைந்தபட்ச ஊதியமாக ஒரு நபருக்கு மாதம் 24,550 ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால், மொத்தத்தில் 25 சதவீதம் பேருக்கு கூட இத்தொகை கிடைப்பதில்லை.சுய வேலைவாய்ப்பு பெற்றவர்களாக கருதப்படும் ஆட்டோ, ஓலா, ஊபர் ஓட்டுநர்கள், ஸ்விக்கி, ஜொமட்டோ தொழிலாளர்கள்; பிற தினக்கூலி தொழிலாளர்கள், நான்கில் ஒருவருக்கு தான் வாரம் முழுதும் வேலை கிடைக்கிறது. இவர்களுக்கு 24,550 ரூபாய் என்பது நிச்சயம் கிடைப்பதில்லை.படித்த இளைஞர்களாலும் 24,550 ரூபாய் சம்பாதிக்க முடிவதில்லை. இவர்களில் பலர், மாதம் 10,000 ரூபாயே சம்பாதிக்கின்றனர். இவர்கள் ஏன், எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் கூட, தனியார் மருத்துவமனைகளில் மிக குறைந்த சம்பளம் தான் பெறுகின்றனர்.தகுதிக்கேற்ப வேலை இல்லாதது, குறைவேலை மற்றும் குறைந்த வருமானம் ஒரு பக்கம் இருக்க, வேலையின்மையும் கணிசமாக இருக்கிறது. மொத்த வேலையின்மை ஐந்து சதவீதம் தான் என்றாலும், 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் 12 சதவீதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் இன்னும் கூடுதலாக இருக்கும். இவர்களுக்கும் இவர்களை சார்ந்து உள்ளோருக்கும் அரசு வழங்கும் மாதம் 1,000 ரூபாய் என்பது சற்றே ஆறுதலாக இருக்குமே ஒழிய, எந்த பிரச்னையையும் தீர்க்காது.வருமானம், வேலை வாய்ப்பு மற்றும் வேலை இழப்பு அபாயம், மூன்றுமே முக்கிய பிரச்னைகள். குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில். யார் காலில் யார் விழுந்தனர், யார் யாருடைய அடிமை என்பதெல்லாம் பற்றி, தங்கள் பிரசாரங்களில் மும்முரமாக பேசி வரும் கட்சிகள், இந்த முக்கிய வாழ்வாதார பிரச்னைகளை பற்றி பேசவே இல்லை.தி.மு.க., தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தாலும், அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைத்தாலும், வருங்காலத்தில் முக்கியத்துவம் பெறக்கூடிய தொழில்கள் எவை என்று அடையாளம் கண்டு, அவற்றில் தொழில் பயிற்சி தர வேண்டும்.கல்வி, பெருமளவில் ஏட்டுக்கல்வியாக இருக்கிறது. தொழில் துறையின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. கல்வி முறையிலும் தரத்திலும் அதிரடி மாற்றங்களை கொண்டு வர வேண்டும். கல்வியிலும் கல்வி நிறுவனங்களிலும் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதன் வாயிலாக, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். சிறு குறு தொழில்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.தொழில் செய்ய குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்டகால முதலீடுகளுக்கு பட்ஜெட்டில் அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.அரசு, கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார துறைகளில், ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. சில வகை பணிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை பாதிக்கின்றன. அதனால், இவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.இவற்றை செய்வதன் வாயிலாக, வேலை வாய்ப்புகளை குறுகிய காலத்தில் அதிகரிக்க முடியும். தாமதம் செய்தால், வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினராகும் வரை முன்னேற்றம் ஏற்படாது.இலவசங்களும் உரிமை தொகையும் தற்காலிக நிவாரணங்களே. அனைவருக்கும் வேலை என்பது அரசுகளின் விருப்பத்தேர்வு அல்ல, அது கடமை. இங்கு, கடமையை புறந்தள்ளி, கவர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசியல் நடப்பது வருத்தத்திற்கு உரியது.- ஆறுக்குட்டி பெரியசாமி, பொருளாதார ஆய்வாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்