தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
'கடந்த கால தவறுகளில் இருந்து தேசிய தேர்வு முகமை இன்னும் பாடம் கற்காதது வருத்தம் அளிக்கிறது' என, 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.நாடு முழுதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' பொது நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி நடந்தது. நாடு முழுதும் இருந்து, 22 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர்.தேர்வுக்கு முன், நீட் தேர்வு வினாத்தாள் சமூக ஊடகங்கள் மூலம் கசிந்ததாக புகார் எழுந்தது. வினாத்தாள் கசிந்தது நிரூபணமானதால், நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்வதாக கடந்த 12ம் தேதி, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை அதிரடியாக அறிவித்தது.மேலும், வரும் ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இதனால், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். அதே சமயம், வினாத்தாள் கசிவு தொடர்பாக டில்லி, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புனே என பல்வேறு நகரங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு, இடைத்தரகர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில், நீட் தேர்வை நடத்தும் பொறுப்பில் இருந்து தேசிய தேர்வு முகமையை நீக்கிவிட்டு, தன்னாட்சி பெற்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதில், 'வினாத்தாள் கசிவை தடுக்க, நீட் தேர்வை முழுமையாக கணினி வழி தேர்வாக நடத்த வேண்டும்' எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கடந்த கால தவறுகளில் இருந்து, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. கடந்த 2024ல் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.அந்த குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருந்தது. அந்த பரிந்துரைகள் என்னவாகின; கண்காணிப்புக் குழுவின் தற்போதைய நிலை என்ன? இது குறித்து என்.டி.ஏ., விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு தொடர்பான நகல்களை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் 29ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.பணத்துக்காக 'நீட்' வினாத்தாளை பகிர்ந்த புனே பள்ளி முதல்வர்'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், பீஹார் உட்பட நாடு முழுதும் சோதனை நடத்திய அதிகாரிகள், வினாத்தாள் கசிவு தொடர்பாக பேராசிரியர்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், மஹாராஷ்டிராவின் புனேவில் செயல்படும் சேத் ஹிராலால் சரப் பிரஷாலா பள்ளியின் முதல்வரான மனீஷா சஞ்சய் ஹவால்தாரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த 22ம் தேதி கைது செய்தனர். புனே நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய சி.பி.ஐ., அவர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கைது செய்யப்பட்ட மனீஷா சஞ்சய் ஹவால்தார், இந்தாண்டுக்காக நீட் தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இருந்துள்ளார். இயற்பியல் பாடத்துக்கான மொழிபெயர்ப்பாளராக இருந்த இவர், வினாத்தாள் தயாரித்த போதே அதில் உள்ள தகவல்களை குறிப்பாக எடுத்துள்ளார். பின், அவற்றை தொகுத்து, அதற்கான பதிலுடன் சேர்த்து, கடந்த ஏப்ரலில் மாணவர் ஒருவருக்கு பகிர்ந்துள்ளார். அதே சமயம், இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட புனேவைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியை மனிஷா மாந்தாரேவுக்கும் இந்த வினாத்தாள் நகலை அனுப்பியுள்ளார். இதற்காக, மாணவரிடம் இருந்து 20,000 ரூபாயும், பேராசிரியையிடம் இருந்து 25,000 ரூபாயும் பெற்றுள்ளார். அவரின் மொபைல் போனின் வாட்ஸாப் தகவல்களை தீவிரமாக ஆய்வு செய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அவரை, 6 நாள் சி.பி.ஐ., காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.