முதல் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வினியோகம்
கரூர்: கரூர் மாவட்டத்தில், முதல் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சீருடை வினியோகம் நடந்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் உள்ள, 881 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும், 77,745 மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும், 48,341 மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்களுடன் புத்தக பை, காலணி, கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில், புவியியல் வரைபட நுால், சீருடை உள்ளிட்ட, 12 வகையான விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், 2 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஏற்கனவே தலா 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட, 1ம் வகுப்பு மாணவ, மாணவியரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் உடல் அளவுகளை எடுத்த பின்னரே சீருடை தைக்க வேண்டியிருந்தது.இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும், 1ம் வகுப்பு மாணவர்களின் அளவீடு சேகரிக்கப்பட்டன. பின்னர், சமூக நலத்துறை மற்றும் மகளிர் தையல் தொழிற்கூட்டுறவு சங்கங்கள் மூலம், அந்தந்த அளவுகளுக்கு ஏற்ப சீருடை தைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. தற்போது சீருடை தைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அவை மாவட்டத்தின் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவ, மாணவியருக்கு தலா, 4 செட் சீருடை வினியோகம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.