உள்ளூர் செய்திகள்

‘வெளிநாட்டவருக்கு நாம் வேலை வழங்க வேண்டும்’

சென்னை: “நம் இளைஞர்கள், வெளிநாட்டவருக்கு வேலை வழங்கும் எஜமானர்களாக உருவாக வேண்டும்,” என, ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பேசினார். ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: திரையரங்கம், பீச் போன்ற கேளிக்கை இடங்களுக்கு தான் இன்றைய இளைஞர்கள், கூட்டம் கூட்டமாக செல்கின்றனர், என்ற ஒரு விமர்சனம் உள்ளது. அதை பொய்ப்பிக்கும் வகையில், இந்தியாவின் ஒட்டுமொத்த சக்தியாக, மாணவ, மாணவியர் இந்த அரங்கில் கூடியுள்ளனர். உங்களின் ஆற்றலை நம்பித்தான், இந்தியா உலக நாடுகளுக்கு சவால்விட்டு கொண்டிருக்கிறது. உங்களின் அறிவை பயன்படுத்திக் கொள்ளத்தான், அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு ஓடி வருகிறார். பிளஸ் 2 தேர்வை, ‘மார்க்’ எடுப்பதற்கான களமாக பார்க்காமல், உலகையே நம் நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்வதற்கான ஏற்பாடாக பாருங்கள். பின், இத்தேர்வு சுகமானதாகவும், பெருமைமிக்கதாகவும் தெரியும். பிரபலங்களுக்கு மட்டுமே ஊடகங்கள் முக்கியத்துவம் தரும் இக்காலத்தில், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக, ‘தினமலர்’ நாளிதழ் நடத்தும் இந்நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது. மாநகராட்சி பள்ளி களில் தானே படிக்கிறோம்; நமக்கென பொருளாதார பின்னணியா உள்ளது? வாழ்வில் நாம் என்ன பெரிதாக சாதித்திட முடியும், போன்ற தாழ்வு மனப்பான்மை யாருக்கும் வேண்டாம். அரசு பள்ளிகளில் படித்த பலர், இன்று அரசின் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ளனர். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கொண்டு வரும் ஆர்வம் நம் இளைஞர்களிடம் இல்லை. படித்து விட்டு, வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் பணியாற்ற வேண்டும், என்ற அவர்களின் எண்ணமே இதற்கு காரணம். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு, அதன் மூலம் புதிய அறிவியல் படைப்புகளை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். அப்போது தான் நம் கலாசாரம், மொழி உலகளவில் பேசப்படும். நம் இளைஞர்கள், உலகின் பல்வேறு நாடுகளில் பணியாளர்களாகவே உள்ள நிலைமாறி, வெளிநாட்டினருக்கு இந்தியாவில் வேலை தரும் அளவிற்கு சிறந்த தொழில் முனைவோராக, எஜமானர்களாக உருவெடுக்க வேண்டும். இவ்வாறு கோபிநாத் பேசினார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்