‘சிறுபான்மை மாணவர்களுக்கு உதவுவதில் தமிழகம் முதலிடம்’
கோவை: “சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில், தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது,” என, தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக்கழகத் தலைவர் சேவியர் அருள்ராசு தெரிவித்தார். கோவையில் நிருபர்களிடம் சேவியர் அருள்ராசு கூறியதாவது:சிறுபான்மையினருக்கு கடந்த ஆண்டு 20 கோடியே 41 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில், கோவையில் மட்டும் அதிகபட்சமாக, இரண்டு கோடியே 79 லட்சம் ரூபாய் கடனாக தரப்பட்டுள்ளது. சச்சார் கமிட்டி பரிந்துரையின்படி, எல்லா மாநிலங்களிலும் உள்ள சிறுபான்மை மாணவர்களுக்கு மூன்று விதமான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக் கல்விக்கு ஒரு பிரிவாகவும், உயர்நிலைக் கல்விக்கு ஒரு பிரிவாகவும், கல்வித் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் மற்றொரு பிரிவாகவும் கல்வி உதவித்தொகை தர இத்திட்டம் வழி வகுக்கிறது. கல்வித் தகுதியின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் ரூபாய் வீதமும், விடுதி மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதமும் தரப்படும். இந்த நிதியாண்டில் 15 கோடியே 50 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த நிதியைப் பெறுவதற்கு யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. தகுதியுள்ள மாணவ, மாணவிகள், நேரடியாக விண்ணப்பிக்கலாம். தேசிய அளவில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இவ்வாறு சேவியர் அருள்ராசு தெரிவித்தார்.