‘சுதந்திர தினத்தில் தேசபக்தி நிகழ்ச்சிகள் வேண்டும்’
இந்த கோரிக்கையை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தொலைக்காட்சி ஊடகங்களிடம் முன்வைத்துள்ளனர். தொலைகாட்சி நிர்வாக இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மாணவ, மாணவிகள் கூறியிருப்பதாவது:சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்திய நாட்டின் விடுதலை போராட்ட வேள்வி பற்றியும், அதற்காக முன்னோர் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட வன்கொடுமைகள் பற்றியும் மாணவ சமுதாயம் அறிய வேண்டும். ஆனால், இந்த சிறப்புமிக்க நாட்களில் இதுபற்றி எதுவும் தெரியாத சினிமா நடிகர், நடிகைகள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சின்னத்திரைகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இந்த அவல நிலை மாற வேண்டும். வீரத் தியாகிகள், தங்களது இன்னுயிரை தந்து, சுதந்திரம் பெற்ற அந்த பெருமைகளை, தியாகங்களை மாணவ, மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் ஊடகங்கள் தேசபக்தி வளர்ச்சிக்கும், ஆக்க பணிகளுக்கும் பயன்படவும், உதவவும் வேண்டும். எனவே வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர திருநாளில் காலை முதல் மாலை வரை சுதந்திரத்தின் பெருமைகளை, தியாகிகளின் வீர வரலாறுகளை காட்சிகளாக, ஆடல் பாடல்களாக, எழுச்சி உரைகளாக, கதை, கவிதை, பட்டிமன்றங்களாக வடிவமைத்து வழங்க வேண்டும். எஞ்சியுள்ள தியாகிகளை அன்றைய தினங்களில் பேட்டி கண்டு, அவர்களை பார்க்க, அவர்களது தியாகங்களை அறிய வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதில் 126 மாணவ மாணவிகள் கையெழுத்திட்டுள்ளனர்.