உள்ளூர் செய்திகள்

‘ராகிங்’ மாணவர்கள் மீது உடனடி நடவடிக்கை

கோவை: ‘ராகிங்’ செய்யும் சீனியர் மாணவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்; தீவிர விசாரணைக்குப்பின் அவர்கள் கல்லூரியை விட்டே நீக்கப்படுவர்,” என, கோவை அரசு மருத்துவக்கல்லூரி ‘டீன்’ (பொறுப்பு) டாக்டர் குமரன் பேசினார். கோவை மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 4ம் தேதி துவங்கியது. இவர்களை வரவேற்ககல்லூரி வளாகத்தில் விழா நடந்தது. 150 முதலாமாண்டு மாணவ, மாணவியர் பெற்றோருடன் அவிநாசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு வந்தனர். இவர்களுக்கு சீனீயர் மாணவ, மாணவியர் கல்லூரி நுழைவாயில் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை அரசு மருத்துவகல்லூரியில், மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்.,) உள்ளிட்ட 12 பட்டய படிப்புகள், நான்கு பட்டமேற்படிப்புகள் உள்ளன. நடப்பாண்டுக்கான மருத்துவபடிப்பில் சேர விண்ணப்பித்த மாணவ, மாணவியரில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று மாணவியர் முதலாமாண்டு சேர்க்கையை நினைவு கூறும் வகையில், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பின், கல்லூரி கலையரங்கில் நடந்த விழாவில், முதலாமாண்டு மாணவ, மாணவியர் பெற்றோருக்கு கல்லூரி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ (பொறுப்பு) டாக்டர் குமரன் தலைமை வகித்து பேசியதாவது: கோவை அரசு மருத்துவக்கல்லூரியில், கூடுதல் இடம் ஒதுக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். மருத்துவக்கல்லூரி வளாகத்திலேயே பல் மருத்துவ படிப்பு, பி.எஸ்.சி., நர்சிங் கல்லூரி ஏற்படுத்தவும் வலியுறுத்தப்படும். 300 படுக்கை வசதிகள் கொண்ட அனைத்து நவீன வசதிகளும் உள்ளடக்கிய பல்துறை சிகிச்சை மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது; விரைவில் இதற்கான பணி மேற்கொள்ளப்படும். முதலாமாண்டு மாணவ, மாணவியர் ‘ராகிங்’ பயம் இன்றி கல்லூரி மற்றும் ஹாஸ்டலில் நிம்மதியாக இருக்கலாம். சீனியர் மாணவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீறி யாராவது ‘ராகிங்’ செய்தால், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, கல்லூரியில் இருந்தே வெளியேற்றும் அதிகாரம் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் படிக்கும் காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல், ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். படிப்பு முடிந்து செல்லும் போது நீங்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு, டாக்டர் குமரன் பேசினார். விழாவில், அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் அன்பு அறவாளி, அரசு மருத்துவமனை உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சவுந்திரவேல், கல்லூரி பேராசிரியர்கள், சீனியர் மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர். ‘ராகிங்’ செய்தால் போன் செய்யுங்கள்: முதலாமாண்டு மாணவ, மாணவியரை ‘ராகிங்’ செய்வோரை தடுத்து அவர்களை எச்சரிக்கை செய்ய பேராசிரியர்கள் அடங்கிய ‘ராகிங்’ தடுப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஹாஸ்டல், கல்லூரி வளாகத்தில் திடீர் விசிட் செய்வர். முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரை ‘ராகிங்’ செய்து மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்துவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தர மருத்துவக்கல்லூரி ‘டீன்’ (பொறுப்பு) டாக்டர் குமரனை 98422 31415 என்ற எண்ணிலும், துணை முதல்வர் அன்பு அறவாளியை 98433 83937 என்ற எண்ணிலும்  முதலாமாண்டு மாணவ, மாணவியர் தொடர்பு கொள்ளலாம்.  ஹாஸ்டல் வார்டன்களிடமும் புகார் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்