உள்ளூர் செய்திகள்

கல்வித்தொகை இழுத்தடிப்பு பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பு

தனியார் கலைக் கல்லூரியில் படிக்கும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், ஐந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளும், 16 தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் என மொத்தம், 21 கலைக் கல்லூரிகள் உள்ளது. இக்கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கும், அவர்களுடைய படிப்புக்கு தகுந்தவாறு, 3,500 முதல் 5,500 ரூபாய் வரை கல்வி உதவித்தொகையாக அரசு வழங்கி வருகிறது. நடப்பாண்டு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மத்திய, மாநில அரசு சார்பில், ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, இரண்டு கோடி ரூபாய் மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று கோடி ரூபாய் உதவித் தொகையை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டு முடிவடையும் நிலையில், உதவித்தொகை வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதால், 1,000க்கும் மேற்பட்ட எஸ்.டி., மாணவர்கள் கல்விக்கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தனியார் கல்லூரியில், ஒவ்வொரு செமஸ்டருக்கும், படிப்புக்கு தகுந்தவாறு கல்வி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அந்த கட்டணத்தை, கல்வி உதவித்தொகையை பயன்படுத்தியே மாணவர்கள் கல்லூரிக்கு செலுத்தி வருகின்றனர். வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், இந்த ஆண்டுக்கான பருவத்தேர்வு நடக்க உள்ள நிலையில், உதவித் தொகை வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கல்லூரி நிர்வாகமோ, கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என, மாணவர்களை கட்டாயப்படுத்தி வருகிறது. அதனால், மாணவர்கள் செய்வதறியாமல் உள்ளனர். ஆதிதிராவிடர் நலத்துறையினர் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக பணியாற்றியவர், மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். தொடர்ந்து, வருவாய்த் துறையில் ஓய்வு பெறும் நிலையில் இருந்த அதிகாரியை, மாவட்ட நிர்வாகம் நியமித்தது. அவரும், பழங்குடியினர் மாணவருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் காசோலையில் கையெழுத்து போடாமல், பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில், தற்போது கதிரேசன் என்பவர் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். அவரோ, இந்த ஆண்டு பழங்குடியினருக்கு கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனக்கூறி, அவர்களுக்கு உதவித் தொகை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரையும், தற்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், கல்வி உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள பழங்குடியின மாணவர்கள், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. கல்வி உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டத்தில் ஈடுபட மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்