உள்ளூர் செய்திகள்

தடய அறிவியல் பாடத்தை புதுப்பிக்க கோரிக்கை

மகாத்மா காந்தி ஐ.எம்.எஸ். சேவாக்ரம்மில் தடய அறிவியல் துறை உதவி பேராசிரியரான மருத்துவர் இந்திரஜித் கந்தேகார், எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் தடய அறிவியல் பாடத்தை, தற்போதைய நவீன தொழீல்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பது, சட்டத்தைக் காப்பாற்றுவதற்கு அடிப்படையாக அமையும் என்று கூறியுள்ளார். தற்போதுள்ள பாடப்பிரிவு போதுமான, தற்போதைய காலத்திற்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால், சட்டத்தை காப்பாற்ற இயலாமல் போய்விடுகிறது என்று கூறி, இது குறித்த 464 பக்க அறிக்கையை சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அளித்துள்ளார். இந்த அறிக்கையில், உச்ச நீதிமன்றம் உள்பட தடய அறிவியலை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்ட 542 தீர்ப்புகளை இந்திரஜித் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இவர் தொடுத்துள்ள பொது நலன் மனு மீது வரும் ஏப்ரல் 27ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. மேலும், கற்பழிப்பு வழக்கு ஒன்றில், தடயவியல் துறையின் இயலாமைத் தனத்தை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு எடுத்துக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள தடய அறிவியல் துறைப் பாடப்பிரிவுகளைப் படித்து உருவாகும் தடய அறிவியல் நிபுணர்களின் செயல்பாடு, குற்றவாளிகளை தப்புவிக்கும் வகையில்தான் அமையும் என்று கந்தேகார் கூறுகிறார். தடய அறிவியல் துறையில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் விதத்தில் பாடப்பிரவுகளை மாற்ற வேண்டும், வெறும் பாடங்களைக் கொண்டு கற்பிப்பதால் எந்த பயனும் இல்லை, எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு தடய அறிவியல் துறையில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றும் வகையிலான பயிற்சியையும் படிப்பின்போதே வழங்க வேண்டும் என்று அரசை காந்தேகார் கேட்டுக் கொண்டுள்ளார். சரியான பயிற்சி இல்லாத தடய அறிவியல் மருத்துவர்களால் பல இடங்களில் நீதியை நிலைநாட்ட முடியாமல் போகிறது. எம்.பி.பி.எஸ்.சில் மற்ற பாடப்பிரிவுகளைப் போல தடய அறிவியலுக்கு செயல்முறைத் தேர்வுகள் கூட இல்லை. உடல் நலத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு இணையாக நாட்டின் சட்டத்திற்கும், நீதிக்கும் முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிட்டோம் என்று கந்தேகார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்