உள்ளூர் செய்திகள்

இளங்கோ அடிகள் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை கலந்தாய்வு

புதுச்சேரி: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் காலியாக உள்ள இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது.புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பிற்கான பள்ளி அளவிலான முதல்கட்ட மற்றும் இரண்டாம்கட்ட சேர்க்கை முடிவடைந்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்காக விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களுக்கும், சமீபத்தில் நடந்த 10ம் வகுப்பு துணை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இதுவரை எந்த பள்ளியிலும் சேராத மாணவ மாணவிகளுக்கும் இறுதி வாய்ப்பாக மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முத்தரையர்பாளையம், இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கான இறுதிகட்ட மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. சேர்க்கை குழுவின் தலைவரும், பள்ளியின் துணை முதல்வரும் பூபதி கலந்தாய்வை நடத்தினார். முதல் நாளான நேற்று 499 மதிப்பெண்ணில் இருந்து, 250 மதிப்பெண் வரையிலான மாணவர்களுக்கு சேர்க்கை நடந்தது. 25 மாணவர்களுக்கு விருப்பப்பட்ட பள்ளி, பாடப் பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டது.தொடர்ந்து, சேர்க்கை ஆணையை சேர்க்கை குழுவின் தலைவர் பூபதி வழங்கினார். கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் சாந்தி, கிருஷ்ணராஜூ, ஸ்ரீதரன், கதிரவன், குமார், சதீஷ், கரிகாலன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இன்று(11ம் தேதி) காலை 10:00 மணியில் இருந்து மதியம் 1:00 மணி வரை, 249 மதிப்பெண்ணில் இருந்து 175 மதிப்பெண் வரை பெற்ற மாணவ மாணவிகளுக்கும், தொடர்ந்து, மதியம் 2:30 மணியில் இருந்து, மாலை 5:30 மணி வரை, குடியிருப்பு இல்லாதவர்கள் பிரிவில் 499ல் இருந்து 175 மதிப்பெண் வரை பெற்ற மாணவ மாணவிகளுக்கும் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்