உள்ளூர் செய்திகள்

கடந்த ஆண்டை விட கூடுதலாக 18,291 மாணவர்களுக்கு இன்ஜி., ‘சீட்’

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் 74 ஆயிரத்து 332 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 ஆயிரத்து 291 மாணவர்கள் கூடுதலாக பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங்கிற்கு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 693 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றிருந்த ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 488 மாணவர்களுக்கு, கடந்த ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை மூன்று கட்டமாக கவுன்சிலிங் நடந்தது. மொத்தம் 47 நாட்கள் நடந்த கவுன்சிலிங்கில் மொத்தம் 74 ஆயிரத்து 332 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 41 ஆயிரத்து 240 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. தற்போது எட்டாயிரத்து 68 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. கடந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில், 56 ஆயிரத்து 41 இடங்கள் (84.2 %) மட்டுமே நிரப்பப்பட்டன; பத்தாயிரத்து 511 இடங்கள் (15.8 %) காலியாக இருந்தன. இந்த ஆண்டு சென்னை, திருச்சி அண்ணா பல்கலைக் கழகங்கள் மூலம் புதிதாக துவக்கப்பட்டுள்ள ஆறு பல்கலைக் கழக கல்லூரிகள் உட்பட 80 கல்லூரிகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொறியியல் படிப்பிற்கான இடங்கள் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 ஆயிரத்து 291 மாணவர்கள் கூடுதலாக பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு அதிகரித்ததே, கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் இப்படிப்பில் சேர காரணம் என கூறப்படுகிறது. மேலும் பொறியியல் படிப்பை முடித்தவுடன், கைநிறைய சம்பளம் கிடைப்பதும் இப்படிப்பு மீது மாணவர்களிடையே ஆர்வம் அதிகரிக்க காரணம். மேலும் கிராமப்புற பகுதிகளில் அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் அதிக செலவின்றி, தங்களது சொந்த ஊருக்கு அருகிலேயே படிக்க முடிகிறது. “கடைசிநாள் வரை கவுன்சிலிங்கிற்கு வந்த மாணவர்கள், எனக்கு இந்த கல்லூரியில் இந்த பாடப்பிரிவில் தான் இடம் வேண்டும் என்ற முடிவுடன் வந்து இடங்களை தேர்வு செய்தனர். அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மற்றும் பத்திரிக்கை தகவல்கள் மூலமாக மாணவர்கள் தாங்கள் கவுன்சிலிங்கிற்கு வரும் போது உள்ள காலியிட விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு தெளிவான முடிவுடன் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர்,” என பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உதரியராஜ் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு கல்லூரிகளில் கடந்த 8ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கின. சில தனியார் பொறியியல் கல்லூரிகள் வகுப்புகளை துவங்கி நடத்தி வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து வகுப்புகளை துவக்க நான்கு அண்ணா பல்கலைக்கழகங்களும் திட்டமிட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்