அமைதி பள்ளத்தாக்கில் பறவைகள் கணக்கெடுப்பு 192 இனங்கள் கண்டறியப்பட்டன
பாலக்காடு: அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் முதன்முறையாக நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில், மொத்தம், 192 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மற்றும் அதன் வன எல்லை மண்டலங்களை முழுமையாக உள்ளடக்கி, கடந்த வாரம் முதல் முறையாக பறவைகள் ஆய்வு நடத்தப்பட்டது.வனத்துறையும், மலபார் இயற்கை வரலாற்று சங்கமும் இணைந்து நடத்திய இந்த கணக்கெடுப்பை, அமைதிப் பள்ளத்தாக்கு வனவிலங்கு காப்பாளர் ஹரிகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இது குறித்து, மலபார் இயற்கை வரலாற்று சங்க உறுப்பினர் டாக்டர் சத்யன் மேப்பயூர் கூறியதாவது:கேரள மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார், 85 பறவை ஆர்வலர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆய்வின் போது, மிகவும் அரிதாக காணப்படும் புலம்பெயர்ந்த பறவைகளான ஏசியன் ஹவுஸ் மார்ட்டின் மற்றும் வெஸ்டர்ன் ஹவுஸ் மார்ட்டின் ஆகியவை அடையாளம் காணப்பட்டன.மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழக்கூடிய, நீலகிரி சிரிப்பான், காட்டு நீலி, நீலகிரி சோலைக்கிளி, செம்புவயிற்று சோலைக்கிளி உள்ளிட்ட, 20 உள்நாட்டு இனங்களும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டன. இந்த கணக்கெடுப்பில், மொத்தம், 192 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.இனப்பெருக்க மையம் கேரளாவில் நிரந்தரமாக வசிக்கும், 11 வகையான பறவை இனங்கள் இந்தப் பூங்காவில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக, இலங்கை தவளைவாயன், இராச்சுக்கு, தீக்காக்கை, மலபார் சாம்பல் இருவாச்சி, மலைப்புறா போன்ற பறவைகள் இங்கு அதிகளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.