ருத்ரா - 2 ஏவுகணை சோதனை வெற்றி
புதுடில்லி: டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ருத்ரா - 2 ஏவுகணையை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பில் உள்ள எதிரிகளின் ரேடார்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை, துல்லியமாக அழிக்கும் திறன் பெற்ற ருத்ரா - 2 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.ஒடிசா கடற்கரையில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் இருந்து, சுகோய் - 30 ரக போர் விமானத்தில் இருந்து காலை 11:30 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது.நடுக்கடலில் உள்ள கப்பல் உட்பட பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரோ - ஆப்டிகல் சிஸ்டம், ரேடார் மற்றும் டெலிமெட்ரி நிலையங்கள் போன்ற கண்காணிப்பு கருவிகள் வாயிலாக, ருத்ரா - 2 ஏவுகணையின் செயல்திறன் சரிபார்க்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஏவுகணை சோதனைக்கு வாழ்த்து தெரிவித்த நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இதில் பணி புரிந்த டி.ஆர்.டி.ஓ.,குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.