உள்ளூர் செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி 92.96 சதவீதம்!

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில், 92.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இது, கடந்தாண்டு தேர்ச்சி விகிதமான, 88.12 சதவீதத்தை விட, 4.84 சதவீதம் கூடுதல். மாநகராட்சி பள்ளி அளவில், சலவை தொழிலாளி மகள், 593 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில், 281 பள்ளிகளைச் சேர்ந்த 2,257 மாணவர்கள், 2,922 மாணவியர் என, மொத்தம் 5,179 பேர், கடந்த மார்ச் 2 முதல் 26ம் தேதி வரை, அரசு பொதுத்தேர்வு எழுதினர்.தேர்வு முடிவு, நேற்று வெளியானது. இதில், மாநகராட்சி பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்கள் 2,028; மாணவியர் 2,750 என, 4,778 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 92.26 சதவீதம். கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 88.12 என இருந்தது. இந்தாண்டு 4.84 சதவீதம் கூடுதலாக பெற்று, மாநகராட்சி பள்ளிகள் அசத்தியுள்ளன.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத்தேர்வில், கடந்தாண்டை விட மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.96 என்ற அளவில் உள்ளது.மகிழ்ச்சிநுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சி.ஐ.டி., நகர் சென்னை மேல்நிலைப் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 43 பேர், 551 - 600 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர். அதே போல், 241 மாணவ மாணவியர் 501 - 550 வரையும்; 543 மாணவ மாணவியர், 451 - 500 வரையும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.மேலும், கணினி பயன்பாடுகள் 8; கணினி அறிவியல் - 10; கணக்குப் பதிவியல் - 8; பொருளாதாரம் - 2; வணிகக் கணிதம் - 2; அடிப்படை இயந்திர பொறியியல் - 2; உணவு சேவை மேலாண்மை - 90; நெசவு ஆடை வடிவமைப்பு - 4; தணிக்கையியல் - 47 என, மொத்தம் 173 மாணவ - மாணவியர் 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.மதிப்பெண் பொறுத்தவரையில், அமைந்தகரை புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மைதிலி 600க்கு 593 மதிப்பெண் பெற்றுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'கஷ்டப்பட்டு படித்தால் வெற்றி நிச்சயம்' என்பதை நிரூபிக்கும் வகையில், சலவை தொழிலாளியின் மகளான மைதிலி, மாநகராட்சி பள்ளிகளிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.அமைந்தகரை, பி.பி., கார்டன் பகுதியை சேர்ந்த, சலவை தொழிலாளி ஆனந்தகுமார் - சிவபாரதி தம்பதியின் மகள், மாணவி மைதிலி கூறியதாவது:நான், 6ம் வகுப்பு முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறேன். 10ம் வகுப்பில் 484 மதிப்பெண்; பிளஸ் 1 தேர்வில் 590 மதிப்பெண் பெற்று மாநகராட்சி அளவில் முதலிடம் பெற்றேன். பிளஸ் 2 தேர்விலும் சாதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.எந்த டியூஷனுக்கும் போகவில்லை. தினமும் பள்ளியில் மாலை 06:30 மணி வரை நடந்த சிறப்பு வகுப்புகளில் மட்டுமே படித்தேன். ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், பெற்றோர், நண்பர்களின் ஊக்கமும் தான் என் வெற்றிக்கு காரணம். எதிர்காலத்தில் சி.ஏ., படிக்க வேண்டும் என்பது என் கனவு.இவ்வாறு அவர் கூறினார்.அதிக மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடம் பிடித்த பள்ளிகள்சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளி, அமைந்தகரை புல்லா அவென்யூ - 593.எம்.எச்.சாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர் - 586.மார்க்கெட் தெரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர் - 583.நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சி.ஐ.டி., நகர் சென்னை மேல்நிலை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி.கணினி வழியில் தேர்வு எழுதியவர் தேர்ச்சிபூந்தமல்லியில் உள்ள, பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் திருநாவுக்கரசு, தமிழகத்தில் இரண்டாவது மாணவனாக கணினி வழியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினார். வழிகாட்டி என்ற 'ஸ்கிரைப்' வினாக்களை படிக்க, ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்து, திருநாவுக்கரசு தேர்வு எழுதினார். தேர்வு முடிவில், திருநாவுக்கரசு 449 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இந்த பள்ளியில் தேர்வு எழுதிய 16 மாணவர்களில், 14 பேர் தேர்ச்சி பெற்றனர். இதே பள்ளியில் பயின்ற மாணவன் ஆனந்தன், கடந்த ஆண்டு, தமிழகத்தில் முதல் முறையாக கணினி வழியில் தேர்வு எழுதினார்.4 மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்ச்சி விபரங்கள்சென்னை மாவட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர் 29,799; மாணவியர் 33,042 என, மொத்தம் 62,841 பேர், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில், 59,967 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.43 சதவீதம்.இந்தாண்டு, மாணவர்களை விட மாணவியர் 3.53 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, மாணவியர், 97.10; மாணவர்கள் 93.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்தாண்டு, சென்னை மாவட்ட தேர்ச்சி விகிதம், 94.44 சதவீதமாக இருந்த நிலையில், இந்தாண்டு, 1 சதவீதம் அதிகரித்து, 95.43 சதவீதமாக உள்ளது.பள்ளிகளின் செயல்பாடுசென்னை மாவட்டத்தில் உள்ள 578 மேல்நிலைப் பள்ளிகளில், அரசு, அரசு உதவிபெறும் 34 பள்ளிகள் உட்பட 170 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.தனியார் பள்ளிகள் 98 சதவீதம், அரசு உதவிபெறும் பள்ளிகள் 94.80 சதவீதம், அரசு பள்ளிகள் 90.60 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 270 மாணவர்கள் உட்பட 1,833 பேர், முக்கிய பாடங்களில் 'சென்டம்' எடுத்துள்ளனர்.செங்கையில் தேர்ச்சி குறைவுகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரின் சதவீதம் 93.27 இது நடப்பாணடில் 2.04 கூடுதலாக பெற்று 95.31 சதவீதமாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 91.49 என மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் இருந்தது. இந்தாண்டு 2.62 சதவீதம் அதிகரித்து 94.11 என்ற அளவில் மேம்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்தாண்டு தேர்ச்சி பெறறவர் 94.29 சதவீதம். அதுவே இந்தாண்டு 93.25 சதவீதம் என குறைந்துளளது. இதில் தாம்பரம் மாநகராட்சி, அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, 98 சதவீதம் பெற்று செங்கல்பட்டு மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்து்ள்ளது. முதல் இரண்டு இடங்களை பாலூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியும், செங்கல்பட்டு மாவட்ட மாதிரி பள்ளியும பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்