முதல்வர் மருந்தகம் துவங்க 37 விண்ணப்பங்கள் தேர்வு
கோவை: கோவை மாவட்டத்தில், முதல்வர் மருந்தகங்கள் தொடங்க 37 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழக மக்கள் பயன் பெறும் வகையில், ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய, முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார்.இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகங்கள் தொடங்க, மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கோவை மாவட்டத்தில் இருந்து, 61 விண்ணப்பங்கள் வந்துள்ளன.மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் இருந்து, 61 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் கூட்டுறவு சங்கங்களின் சார்பில், 22 விண்ணப்பங்களும், தனி நபர்கள் சார்பில், 15 விண்ணப்பங்களும் என மொத்தம், 37 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதில், 24 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, விரைவில் உரிமம் வழங்கப்படும், என்றார்.