உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி மையங்கள் 3,761லிருந்து 681 ஆக குறைந்தது

காஞ்சிபுரம்: கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020ல் மார்ச் முதல், 2021 அக்டோபர் மாதம் வரை, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டதுடன், நினைவாற்றலும் குறைந்தது.இதை ஈடு செய்யும் வகையில் மாணவ - மாணவியரின் கற்றல் திறன் அதிகரிக்க தன்னார்வலர்கள் வாயிலாக, தினமும் மாலை நேரத்தில், கல்வி பயிற்றுவிக்க, மாலை 5:00 மணி முதல், 7:00 மணிக்குள், கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு, மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இத்திட்டம் துவக்கப்பட்டது.இல்லம் தேடி கல்வி திட்டத்தில் துவக்க நிலை எனப்படும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்பிக்க, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சியும், உயர் துவக்க நிலை எனப்படும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு கற்பிக்க, பட்டப்படிப்பு பயின்ற தன்னார்வலர்கள் வாயிலாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கப்பட்டபோது, மாணவ- மாணவியர் கல்வி பயில ஆர்வம் காட்டினர். இதனால், 2022ம் ஆண்டு மாவட்டம் முழுதும் உள்ள காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் என, ஐந்து ஒன்றியங்களிலும் துவக்க நிலை, உயர் துவக்க நிலை என, இரு மையங்களிலும், 3,761 மையங்களில், 71,367 மாணவ- மாணவியர் கல்வி பயின்று வந்தனர். தற்போது, 681 மையம் மட்டுமே செயல்படுகிறது. இதில், 10,215 மாணவ- மாணவியர் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.இதுகுறித்து, இல்லம் தேடி கல்வி மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனாவில் இருந்து இயல்பு நிலை திரும்பியபின், மையத்திற்கு வரும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வந்தது. இதனால், இல்லம் தேடி கல்வி மையத்தின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.இருப்பினும், சமூகத்தில் பின் தங்கியுள்ள பகுதியில் வசிப்பவர்களின் பகுதியில், இல்லம் தேடி கல்வி மையம் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்