உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 மாதிரி தேர்வு 1,000 மாணவர்களை பங்கேற்க அறிவுறுத்தல்

கரூர்: “மாவட்ட மைய நுாலகத்தில், குரூப் - 4 போன்ற தேர்வுகளுக்கு குறைந்தது, 1,000 மாணவர்கள் பங்கேற்கும் அளவுக்கு, எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்,” என, கலெக்டர் பிரசன்னா ராமசாமி பேசினார்.கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், 59-வது தேசிய நுாலக வார நிறைவு விழா மற்றும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் -4 மாதிரி தேர்வு தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், கலெக்டர் பிரசன்னா ராமசாமி தலைமை வகித்து பேசியதாவது:நுாலகங்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம், அங்கு நாம் புத்தகங்களோடு பேச வேண்டும் என்பதே ஆகும். சமூகம் தவறான பாதைக்கு செல்வதை தடுக்கும் மையமாகவும், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் இடமாகவும் நுாலகங்கள் செயல்பட வேண்டும்.கிராமப்புற நுாலகங்கள் திறக்கப்படுவதோடு, அங்குள்ள மாணவர்களும், இளைஞர்களும் அவற்றை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாவட்ட மைய நுாலகம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் மாதிரி தேர்வுகளில், வரவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் -4 போன்ற தேர்வுகளுக்கு குறைந்தது, 1,000 மாணவர்கள் பங்கேற்கும் அளவுக்கு எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட மைய நுாலக அலுவலர் சிவக்குமார், கரூர் வருமானவரி துறை ஆய்வாளர் கார்த்திக், பரணி பார்க் பள்ளி முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், வாசகர் வட்டத் தலைவர் சங்கர், முதல் நிலை நுாலகர் அபிராம சுந்தரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்