உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: 450 பேர் பங்கேற்பு

சென்னை: பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரி பார்த்தல் நிகழ்ச்சியில் முதல் நாளில் 450 பேர் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாநகராட்சி ஆகிய துறைகளின் கீழ் வரும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஏழாயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புபடி, ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான மூன்று நாள் நிகழ்ச்சி 22ம் தேதி துவங்கியது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான சான்றிதழ் சரி பார்த்தல் நிகழ்ச்சி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. தமிழ்ப் பாடத்தில் 112 பேர், ஆங்கிலத்தில் 257 பேர் மற்றும் கணிதத்தில் 96 பேர் என 465 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 450க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்றும், தமிழ்ப் பாடத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஒரு சிலர் வரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 23ம் தேதி கணிதத்தில் 442 பேர், இயற்பியலில் 140 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். நாளை வேதியியல் பாடத்தில் 122 பேர், தாவரவியலில் 98, விலங்கியலில் 88, வரலாறில் 26, புவியியலில் இரண்டு,  கணிதம்-தெலுங்கில் எட்டு, கணிதம்-உருதில் இரண்டு மற்றும் வேதியியல்-தெலுங்கு பாடத்திற்கு ஒருவர் என மொத்தம் 347 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட சி.இ.ஓ., பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் குழு, சான்றிதழ் சரி பார்த்தல் பணியை கவனித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்