உள்ளூர் செய்திகள்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 5 பேர் கைது! 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது அம்பலம்!

புதுடில்லி: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில், ராஜஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் 30 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுதும் பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.நாடு முழுதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' எனப்படும், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.மத்திய அரசின், என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான நீட் தேர்வு கடந்த 3ம் தேதி நடந்தது. நாடு முழுதும் 23 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பே, வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.நீட் வினாத்தாள், மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அங்கிருந்து ராஜஸ்தான் வழியாக பிற மாநிலங்களில் கசிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, நாசிக்கைச் சேர்ந்த ஷுபம் கைர்னர், 30, என்பவர் கைது செய்யப்பட்டார்.ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அச்சடிக்கப்பட்ட வினாத்தாள் நகலை, குருகிராமில் உள்ள டாக்டருக்கு ஷுபம் அளித்துள்ளார். அவர், ராஜஸ்தானில் இருந்த தொழிலதிபர்களான சகோதரர்கள் இருவருக்கு அனுப்பி வைத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இது குறித்து சி.பி.ஐ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராஜஸ்தானின் ஜம்வா ராம்நகரைச் சேர்ந்த மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் ஆகிய இரு சகோதரர்களும், தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, குருகிராமில் உள்ள டாக்டர் ஒருவரிடம் இருந்து வினாத்தாளை 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர், அந்த வினாத்தாளை ராஜஸ்தானின் சிகாரில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த தன் மகனுக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பி வைத்துள்ளார்.அங்கு எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு ஆலோசனை முகவராக இருந்த ராகேஷ் குமார் மண்டவாரியா என்பவரிடம் இந்த வினாத்தாள் விற்கப்பட்டுள்ளது. அவர், சிகாரில் செயல்பட்டு வந்த நீட் தேர்வு பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு தலா 30,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். ராஜஸ்தானில் மட்டும் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வினாத்தாள் விற்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், கேரளா, உத்தரகண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வினாத்தாள் பரவியுள்ளது. அந்த வினாத்தாளில் இருந்த 410 கேள்விகளில், 120 கேள்விகள் தேர்வில் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால், குருகிராமைச் சேர்ந்த யாஷ் யாதவ், நாசிக்கைச் சேர்ந்த ஷுபம் கைர்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளாவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து மொபைல் போன், லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.வினாத்தாள் கசிவு தொடர்பாக என்.டி.ஏ., தலைமை அலுவலகத்திலும், கேள்வித்தாள்களை தயாரித்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நாடு முழுதும் பல்வேறு இடங்களில் இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.என்.டி.ஏ.,வை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனு அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் தன்வி துபே உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம்:தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தேசிய தேர்வு முகமையை உடனடியாக கலைக்க வேண்டும். அல்லது முழுமையாக சீரமைக்க வேண்டும். பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட வலிமையான அமைப்பை உருவாக்க வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். வினாத்தாள் கசிவு குறித்து நான்கு வாரங்களுக்குள் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முறைகேடுகளைத் தடுக்க வினாத்தாள்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு முறை, கணினி வழி தேர்வு மற்றும் மையம் வாரியாக முடிவுகளை வெளியிடுதல் போன்ற மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்