உள்ளூர் செய்திகள்

கொசு உற்பத்திக்கு காரணமான கல்லுாரிக்கு ரூ.50,000 அபராதம்

திருவேற்காடு: திருவேற்காடு நகராட்சி நிர்வாகம், மர்ம காய்ச்சல், டெங்கு பரவலை தடுக்கும் வகையில், வீடு, கடை, அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், வணிக வளாகம் மற்றும் தொழிற்சாலைகளில், சுகாதார நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம், சுகாதார பிரிவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில், 105 டெங்கு தடுப்பு பணியாளர்கள், சோதனை மேற்கொண்டனர்.அப்போது, வேலப்பன்சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சவிதா பல் மருத்துவ கல்லுாரி வளாகத்தில், தேங்கி இருந்த நன்னீரில், &'டெங்கு&' கொசு புழுக்கள் உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.இது குறித்து, கல்லுாரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நேற்று நடந்த சோதனையில், திருவேற்காடு சிவன் கோவில் அருகில் உள்ள, பழைய இரும்பு விற்பனை கடையில் தேக்கி வைத்திருந்த நீரிலும், டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.அதனால், அக்கடையின் உரிமையாளருக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நகராட்சி பகுதிகளில், சுகாதார நடவடிக்கை தினமும் தொடரும் என, நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். மீஞ்சூர் வட்டாரத்தில், கடந்த ஒரு வாரத்தில், ஆறு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதை தொடர்ந்து,மருத்துவ குழுவினர் கிராமங்களில் முகாமிட்டு, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். வீடுகளில் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும், நீண்டநாட்கள் தண்ணீர் தேக்கி வைப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.கடைகளில் பயனற்ற டயர், பிளாஸ்டிக் கேன் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.நேற்று பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மீஞ்சூர் சுகாதாரத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்