மருத்துவ படிப்புக்கு குவிந்த விண்ணப்பங்கள்... 6,678: என்.ஆர்.ஐ., இடங்களுக்கு சென்டாக் செக்
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு 6,678 பேர் விண்ணப்பித்துள்ளனர்.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு, கடந்த 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை சென்டாக் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவ, மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 8,558 பேர் இ.மெயில் கொடுத்து பதிவு செய்திருந்த சூழ்நிலையில், அவர்களில், 6,678 பேர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளன.அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 1,083 மாணவர்கள் விண்ணப்பித்து டாக்டர் கனவில் உள்ளனர். அடுத்து அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீடு என, இரண்டிற்கும் சேர்த்து 590 பேர் விண்ணப்பித்துள்ளனர்.நிர்வாக இடங்களுக்கு, இந்தாண்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்து 4,873 பேர் விண்ணப்பித்துள்ளனர்.பிராந்திய ரீதியாக பார்க்கும்போது, புதுச்சேரியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு 1,672 பேர், பிற மாநிலங்களில் 4,874 பேர் விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ், விளையாட்டு வீரர் 79, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு 18, மாற்றுத்திறனாளி 5, விடுதலை போராட்ட வீரர் வாரிசு 49 பேர் விண்ணப்பித்துள்ளனர்.சிறுபான்மையினர் இடங்களுக்கு தெலுங்கு பேசும் மாணவர்கள் 36, கிறிஸ்துவ பிரிவு மாணவர்கள் 45 பேர் விண்ணப்பித்துள்ளனர்.என்.ஆர்.ஐ., சீட்டுகள்கடந்தாண்டு இந்த என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு சீட்டுகளில் போலி உறவு முறை சான்றிதழ்கள் கொடுத்து தமிழகம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் சேர முயன்றது அம்பலமானது. இது புதுச்சேரியில் உள்ள பெற்றோர், மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தாண்டும் என்.ஆர்.ஐ., சீட்டுக்கு 103, பாரின் நேஷனல் 2, ஓ.சி.ஐ., 27, என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு 251 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் தீவிர தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. என்.ஆர்.ஐ., சீட்டு விண்ணப்பித்து உறவு முறை ஆவணங்கள் நேரடியாக அந்தந்த நாடுகளில் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பி உண்மை தன்மை சோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.போலி என்று தெரிய வந்தால் சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர்கள், அவர்களது பெற்றோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சென்டாக் முடிவு செய்துள்ளது.