‘இந்திய பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 7 சதவீதம் அவசியம்’
புதுடில்லி: இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு, 7 - 8 சதவீதம் வளர்ச்சி காண்பது அவசியம் என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்தார். டில்லியில், 15வது நிலையான அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், மேலும் கூறியதாவது: இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக, இந்தியாவின் பொருளதாரம் ஆண்டுக்கு, 7 - 8 சதவீதம் வளர்ச்சி காண்பது மிகவும் அவசியம். அதுமட்டுமின்றி, அடுத்த 10 ஆண்டுகளில், நம் பொருளாதார பலம் இரு மடங்கு அதிகரிக்கவும், அந்த வளர்ச்சி அத்தியாவசியமான ஒன்று. மேற்கண்ட இலக்குகள் எட்டப்பட வேண்டும் எனில், உற்பத்தி திறனை கட்டமைப்பதுடன், நம் வளர்ச்சி நிலையானதாக இருப்பதை உறுதி செய்து கொள்வது மிக முக்கியம். இதுதவிர, சுற்றுப்புறச் சூழலை பேணி பாதுகாப்பதும் அவசியமாக உள்ளது. ஏனெனில், ஒவ்வொரு நாட்டிற்கும், காலநிலை மாறுபாடு என்பது, மிக பெரும் சவாலாக உருவெடுத்து உள்ளது. எனவே, காலநிலையை உறுதிப்படுத்தி கொள்ளக்கூடிய கண்டுபிடிப்புகளே, தற்போதைய உண்மையான தேவை. புதிய அடிப்படை ஆண்டின் கணக்கீட்டின்படி, கடந்த 2013 - 14ல், நாட்டின் பொருளாதாரம், 6.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, பழைய அடிப்படை ஆண்டின் கணக்கீட்டின்படி, வெறும், 4.7 சதவீதமாக மட்டுமே மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு, சின்கா பேசினார்.