தமிழகத்தில் பெண்கள் எழுத்தறிவு குறைந்த 7 மாவட்டங்கள்
சென்னை: “தமிழகத்தில் பெண்கள் எழுத்தறிவு குறைவாக உள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், பெண்கள் எழுத்தறிவை மேம்படுத்த, ‘கற்கும் பாரதம்’ என்ற திட்டம், இம்மாதம் முதல் செயல்படுத்தப்படும்,” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழகத்தில், பெண்கள் எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டங்களில், புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: நாடு முழுவதும், பெண்கள் எழுத்தறிவு 50 சதவீதத்திற்கு குறைவாக உள்ள 365 மாவட்டங்களில், பெண்கள் எழுத்தறிவை மேம்படுத்த, ‘கற்கும் பாரதம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பெண்கள் எழுத்தறிவு குறைவாக இருப்பதாக தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஏழு மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில், பெண்கள் எழுத்தறிவை மேம்படுத்தும் திட்டம், இம்மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. இதற்கான நிதியை, மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் வழங்கும். இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. இப்போது உடனடியாக ஒன்பது கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். ‘சீமெட்’ பயிற்சி ஆரம்பம்: ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் இயக்கக வளாகத்தில், மாநிலக் கல்வி மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் (சீமெட்) சார்பில், கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக, ஆறு மாதங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை, அமைச்சர் நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:ஆரம்ப, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கும் வசதி இதுவரை இல்லாமல் இருந்தது. மாறிவரும் கல்வி சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள, முறையான பயிற்சி அளிக்கும் நிறுவனம் தேவை. அந்த தேவை விரைவில் பூர்த்தியாக உள்ளது. மூன்று கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் மாநிலக் கல்வி மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிந்து, வரும் ஏப்ரல் மாதத்திற்கும் திறக்கப்படும். அதுவரை காத்திருக்காமல் இப்போதே பயிற்சிகள் துவங்கியுள்ளன. கல்வியை மேம்படுத்த தற்போதைய தேவை பயிற்சி தான். ஆசிரியர்கள் மட்டுமில்லாமல், கல்வித்துறையில் உள்ள பல்வேறு அலுவலர்களுக்கும் இந்த மையத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கும், இந்த மையத்தின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம், பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, ஆசிரியர் கல்வி இயக்குனர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.