காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் 7,808 பேர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் 7,808 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை சென்னை டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார்.தமிழகத்தில் சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) மற்றும் சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு நேற்று நடந்தது. காலியாக உள்ள ஆயுதப்படை காவலர்கள் 2,599, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 86, சிறைக் காவலர்கள் 674 இடங்கள் என மொத்தம் 3,359 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுதும் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏ.கே.டி., மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளி, தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளி, இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி, மகாபாரதி பொறியியல் கல்லுாரி என 5 மையங்களில் ஆண் தேர்வாளர்களுக்கும், பெண் தேர்வாளர்களுக்கு தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியில் எழுத்து தேர்வு நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்த 9,021 ஆண்கள், 777 பெண்கள் என மொத்தம் 9,798 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.அரியலுார் மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா(பொறுப்பு) தலைமையிலான தேர்வுக் குழுவினர் தேர்வு பணிகளை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜவஹர்லால், மணிகண்டன் மற்றும் 6 டி.எஸ்.பி.,க்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 102 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 800க்கும் மேற்பட்ட போலீசார் தேர்வு நடந்த அறைகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.தேர்வு மையங்களில், தேர்வாளர்கள் காலை 8:00 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அனுமதி சீட்டு, பால்பாயிண்ட் பேனா, அடையாள அட்டையுடன் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.போலீஸ் குழுவினர், தேர்வர்களை முழுதுமாக சோதனை செய்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மொபைல் போன், ஸ்மார்ட்வாட்ச், கால்குலேட்டர், பென்சில், பேக் மற்றும் எல்க்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை மையத்தின் வாயிலிலேயே வாங்கி வைத்துக்கொண்டனர்.காலை 10:00 தேர்வு துவங்கி, பிற்பகல் 12:30 மணி வரை நடந்தது. முதலில் பொது தமிழ் தகுதித் தேர்வும், பிறகு ஜி.கே., எழுத்துத் தேர்வும் நடந்தது. தேர்வில் 7,174 ஆண்கள், 634 பெண்கள் என மொத்தம் 7808 பேர் பங்கேற்றனர். 1990 பேர்(1,847 ஆண்கள்,143 பெண்கள்) தேர்வுக்கு வரவில்லை.சென்னை டி.ஐ.ஜி., (தொழில்நுட்பம்) திஷா மிட்டல், தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மையத்தில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேர்வு விடை தாள்கள் தேர்வு மையத்தில் இருந்து அனுப்பி வைப்பதற்கான பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா உடனிருந்தார்.