பழங்குடியினருக்கான சர்வதேச விளையாட்டு போட்டி: 80 வீரர்கள் தேர்வு
ஊட்டி: பழங்குடியினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 80 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி, ஏலகிரி, கொல்லிமலை உட்பட தமிழகத்தின் பல்வேறு மலைப் பிரதேசங்களில் 36 வகை பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பலர் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். விளையாட்டு திறமையை அடையாளம் காணும் வகையில் 3 ஆண்டுக்கு ஒரு முறை பழங்குடியினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான போட்டிகள் வரும் நவம்பர் முதல் வாரம் பெங்களுரூவில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ள கால்பந்து வீரர்களின் தேர்வு நேற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. தமிழக ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், "மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் திறன் பெற்ற பல இளைஞர்கள் பழங்குடியின சமுதாயத்தில் உள்ளனர். அவர்கள் பிற சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்களுடன் நன்கு பழகி, அவர்களோடு இணைந்து விளையாடும் நோக்கத்தில் பழங்குடியினருக்கான விளையாட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. சர்வதேச போட்டியில் கால்பந்து அணிக்கு 20 பேர், வில் வித்தை அணிக்கு ஏலகிரியில் இருந்து 12 பேர், அதலெடிக் உட்பட பிற விளையாட்டுகளுக்கு 50 பேர் என 80க்கும் மேற்பட்ட பழங்குடியின வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.