உள்ளூர் செய்திகள்

அனைத்திலும் அக்கறை காட்டுவார்களா அதிகாரிகள்?

ஈரோடு: கலெக்டர் மகள் படிக்கும் பள்ளியில், தண்ணீர் முதல் டாய்லெட் வரை சரியாக இருக்கிறதா என, ஆய்வு செய்யக் குவியும் அதிகாரிகள், அதன் அருகிலேயே, ஆயா வீட்டில் இயங்கும் அங்கன்வாடி மையத்தை கவனிக்க மறுக்கின்றனர். ஈரோடு, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், ஜூன் 15ம் தேதி, தன் மகளை இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார். இடைப்பட்ட இரண்டு நாளில், ஏராளமான அதிகாரிகள், இப்பள்ளியை முற்றுகையிட்டனர். சத்துணவுக் கூடம், சமையலறை, கழிவறை, குடிநீர், வகுப்பறை உள்ளிட்ட வசதிகளின் தரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால், குமலன்குட்டை பள்ளியில் இருந்து, அரை கி.மீ., தொலைவில், கோவை மெயின் ரோட்டிலேயே, சங்குநகர் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. 40 குழந்தைகள் பயில்கின்றனர். ஓராண்டுக்கு முன், அங்கன்வாடி மைய சுவரில் கீறல் விழுந்து, மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது. ஆபத்தான கட்டடத்தில் குழந்தைகள் தங்குவதைத் தவிர்த்து, ஆயா ஜெயம்மா வீட்டில், அங்கன்வாடி மையம் தற்காலிகமாக செயல்பட ஆரம்பித்தது. இடிந்த அங்கன்வாடி மையம், ஓராண்டாக பூட்டிக் கிடக்கிறது. ஆயாவின் வீட்டிலேயே, மையம் தொடர்ந்து செயல்படுகிறது. பத்துக்கு பத்து அளவு கொண்ட அந்த குறுகிய வீட்டில், ஒருபுறம் சமையல் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு புறம், இரண்டு காஸ் சிலிண்டர்களுக்கு மத்தியில், சமையல் நடக்கிறது. இதற்கு நடுவே, குழந்தைகள் அமர வைக்கப்பட்டு, பாடமும் நடத்தப்படுகிறது. சிறிய இடம் என்பதால், குழந்தைகள் யாரும் அங்கன்வாடி மையத்துக்கு வருவதே இல்லை. மதியம் சாப்பாடு போடும் நேரம் மட்டும், அருகில் உள்ள வீடுகளில் இருந்து, குழந்தைகள், தட்டுடன் வந்து உணவு வாங்கிச் செல்கின்றனர். மொத்தம் 40 குழந்தைகள் இருப்பதாக கணக்கு காட்டினாலும், மையத்தில் காலை வந்து மதியம் வரை இருப்பது, பத்துக்கும் குறைவான குழந்தைகளே. கலெக்டர் குழந்தை பயில்வதாலேயே ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மீது அக்கறை காட்டும் பல்வேறு துறை அதிகாரிகள், அதே போன்ற அக்கறையை, அனைத்துப் பள்ளிகள் மீதும் காட்ட வேண்டும் என்பதே, பெற்றோர்கள் விருப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்