உள்ளூர் செய்திகள்

உதயமாகிறது தேசிய காவல்துறை பல்கலைக்கழகம்

சட்டம் ஒழுங்கு மேம்பாட்டுக்கு உதவக் கூடிய வகையில் படிப்புகளையும் சிறப்புப் பயிற்சிகளையும் தரவிருக்கும் தேசிய காவல்துறைப் பல்கலைக்கழகம் ஒன்று விரைவில் துவங்கப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2010ம் ஆண்டிலிருந்து செயல்படத் துவங்கும். பயாலஜிக்கல் வார்பேர் எனப்படும் உயிரியல் போர் முறைகள், சிக்கல் தீர்ப்பு மேலாண்மை, தடயவியல், தீவிரவாதம் ஆகியவற்றில் இந்த பல்கலைக்கழகம் சர்வதேசத் தரத்திலான ஆய்வு மற்றும் சிறப்புப் பயிற்சிகளை வழங்கிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு குறித்த உக்தி மையமாக இது செயல்படும். பல்வேறு மாநிலங்களிலுள்ள போலீஸ் பயிற்சி மையங்கள், போலீஸ் அகாடமிக்கள், பாராமிலிடரி பயிற்சி மையங்கள் ஆகியவை இந்த பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டு இதன் கீழ் இயங்கிடும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள், தீவிரவாதம், விசாரணை, சைபர் குற்றங்கள், வி.ஐ.பி.பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் தந்திடும். பட்ட மேற்படிப்பளவில் இந்த பல்கலைக்கழகமானது போலீஸ் சயின்ஸ் படிப்பைத் தரவிருக்கிறது. இந்திய போலீஸ் துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அத்தனை அம்சங்களும் இந்தப் படிப்பில் தரப்படும். இந்தியாவில் தோராயமாக 25 லட்சம் போலீசார் உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். தேசிய போலீஸ் பல்கலைக்கழகத்தில் படித்து முடிப்பவருக்கு பாதுகாப்புப் படைகள், பாராமிலிடரி படைகள் மற்றும் போலீஸ் பிரிவுகளில் பணி பெற முன்னுரிமை தரப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்