கடைசி நேர குழப்பத்தைத் தவிர்க்க..
மாணவர்களும் பெற்றோரும், எந்த கல்லூரியில் எந்தப் படிப்பை தேர்வு செய்ய முடியும் என்ற வழிகாட்டுதலுக்கான அரங்கம்தான் டிஸ்ப்ளே ஹால். டிஸ்ப்ளே ஹால் என்பது, சில பெரிய திரைகளில் எந்தெந்த கல்லூரிகளில் எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கு எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதற்கான ஒரு அரங்கமாகும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக வங்கிக்குச் சென்று பணம் கட்டிவிட்டு டிஸ்ப்ளே ஹாலுக்கு வர வேண்டும். டிஸ்ப்ளே ஹாலில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் காலியிடங்கள் பற்றிய நிலவரம் திரையிடப்படுகிறது. இதனைப் பார்த்துக் கொண்டு கலந்தாய்வு அரங்கத்திற்குள் செல்லலாம். ஆனால், அதற்குள் இருக்கும் இடைவெளிதான் சில மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதாவது, டிஸ்ப்ளே ஹாலில் ஒன்று, இரண்டு காலியிடங்கள் இருந்து அந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம் என திட்டமிடும் மாணவர்களுக்கு நிச்சயமாக அந்த பாடப்பிரிவு கிடைக்கும் என்று கூற இயலாது. ஆனால் 5 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்கள் இருப்பின் அதேப் பாடப்பிரிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தங்களது கட்-ஆப் நேரத்தில் ரேங்க் பட்டியலில் முன்னணியில் இருக்கும் மாணவர்கள் குறைந்தது 2 முதல் 3 காலியிடங்கள் இருக்கும் பாடப்பிரிவை கூட தேர்வு செய்யும் வாய்ப்பு கிட்டும். ஆனால் ரேங்க் பின்தங்கியிருக்கும் மாணவர்கள் குறைந்தது 5 காலியிடங்கள் கொண்ட பாடப்பிரிவை தேர்வு செய்யலாம் என திட்டமிடுவது கடைசி நேர குழப்பத்தைத் தவிர்க்கலாம். மாணவர்கள் மூன்று விதமான பாடப்பிரிவு/கல்லூரியை தேர்வு செய்து கொள்வதும் நல்லது.