வெயிலில் வாடிய பள்ளி மாணவர்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தனித்திறன் போட்டிக்காக, மாணவர்கள் பல மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டனர். ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள், ராமநாதபுரம் தனியார் பள்ளியில் நடந்தது. போட்டிகள் காலை 9.30 மணிக்கு துவங்கும் என பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவித்திருந்தது. இதையொட்டி, ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் காலை 8 மணிக்கே வந்தனர். காலை 9.30 மணிக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், போட்டிகளை துவங்கி வைக்காமல், நடுவர்களுக்கான கூட்டத்தைக் கூட்டி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். காலை 11.30 மணி வரை கூட்டம் நிறைவடையவில்லை. இதனால், இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் போட்டிக்காக மாணவர்கள் வேஷத்துடன் வெயிலில் காத்துக் கிடந்து அவதிப்பட்டனர். காலை 11.50 மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், &'காலை 7 மணிக்கே வீடுகளில் அரைகுறையாக சாப்பிட்டு வந்த குழந்தைகள், வெயிலில் அதிக நேரம் காக்க வைக்கப்பட்டதால் சோர்வுற்றனர். இதனால், போட்டியில் திறமையை சரியாக வெளிப்படுத்த முடியவில்லை&' என்றார்.