கம்ப்யூட்டர் பயன்பாட்டால் இடைநிற்றல் குறைந்துவிட்டது
தேசிய கல்வி தினத்தையொட்டி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக பாடுபட்ட மூன்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பில், விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அன்பழகன், பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ்.ஏ., பள்ளி ஆசிரியர் முகமது அஸ்லாம், அணைக்கட்டுச்சேரி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பூங்கோதை ஆகிய மூன்று பேருக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில், தொடக்கக் கல்வி இயக்குனர் சங்கர், விருதுகளை வழங்கினார். விழாவில், இயக்குனர் பேசியதாவது: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் ஒப்பந்தம், 2005ல் கையெழுத்தானது. இத்திட்டத்தின் மூலம், 80 ஆயிரம் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். கற்றலில், கம்ப்யூட்டர் பயன்பாடு வந்ததில் இருந்து, மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் குறைந்துள்ளது. மாணவர்களும், அதிகளவில் கம்ப்யூட்டர் அறிவை பெற்றுள்ளனர். இது, அவர்களின் கல்வி கற்கும் திறனை மேம்பாடு அடையச் செய்துள்ளது. ஒரு காலகட்டத்தில், அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் செயல்பாடு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. இன்று, ஆசிரியர்களும், மாணவர்களும் அதிக ஆர்வத்துடன் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துகின்றனர். அரசுப் பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கல்வி கற்கும் மிகப்பெரிய திட்டத்தை விரைவில், தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இவ்வாறு சங்கர் பேசினார்.