வேலை தேடாதீர்கள் வேலை கொடுங்கள்
பெண்கள் கல்வி கற்பது நகரத்தில் மட்டுமல்ல கிராமத்திலும் அவசியம். ஒரு குடும்பத்தில் ஆண் படித்திருந்தால் அவனுக்கு மட்டுமே பயன், பெண் படித்திருந்தால் குடும்பமே கல்வி கற்றதற்கு சமம். எனவே பெண் கல்வி கற்பது மிக மிக அவசியம். பெண்கள் கல்வி கற்பது எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு படிப்பினை தேர்ந்தெடுப்பதும் அவசியம். படிப்பு என்று வரும்பொழுது பெரும்பாலோனோர் பொறியியல் படிப்பைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் பொறியியல் கல்லூரிகளை விட கலை & அறிவியியல் கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்திற்கு வேலைக்குச் செல்ல முடியும் என்பதை நீங்கள் காணலாம். பாடத்தை பாடமாக மட்டும் படிக்காமல், அந்த படிப்போடு சம்பந்தப்பட்ட துறையின் அனுபவத்தையும் படிக்கும்பொழுதே பெற வேண்டும். அப்படி பெற்றால் மட்டுமே இது சாத்தியம். பொறியியல் படித்துவிட்டு 8000 சம்பளம் வாங்கும் எத்தனையோ பேரை பார்க்கிறோம். அதே நேரத்தில் ஓட்டுநர் வேலையில் 15000க்கும் மேல் சம்பளம் வாங்கும் நபர்களும் இருக்கிறார்கள். பொறியியலுக்கான மோகம் குறையவேண்டும். இன்றைக்கு பலதரப்பட்ட கல்லூரிகளும் சரியாக பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. கலை அறிவியல் கல்லூரிகளும் கூட பாடத்திட்டங்களை நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொடுத்து, தொழிற் பயிற்சியையும் கற்றுக்கொடுப்பதன் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்கலாம். இதன் பயனை உணர்ந்த மாணவிகள் பொறியியல், மருத்துவம் படிப்பதற்கு சேர்ந்துவிட்டு, அந்தப் படிப்புகள் வேண்டாம் என தவிர்த்துவிட்டு, கலை அறிவியல் படிப்பதற்காக எங்கள் கல்லூரியில் சேர்ந்திருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். "வேலை தேடுங்கள் என்பதை விட வேலை கொடுங்கள்" என்று தான் எங்கள் மாணவிகளுக்கு நாங்கள் சொல்லிக்கொடுப்பது. இன்றைக்கு வேலை தேடுவோர் பாரபட்சமின்றி 45 வயதிலும் வேலை தேடுகின்றனர். இதற்கு காரணம் தங்களை குறிப்பிட்ட வேலைக்கு தயார்படுத்தாதே ஆகும். இந்த மாதிரியான தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தங்களை புகுத்திக்கொள்ளும் தவறான அணுகுமுறையும் ஒரு காரணம். அவர்கள் வேலை கொடுக்க வேண்டுமானால் அதற்கேற்ப தகுதிகளை வளர்த்திருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் வெறும் பாடங்களின் மூலம் மட்டுமே பெற முடியாது. பாடங்களை தவிர்த்து தனித்திறன்களை வளர்க்கக்கூடிய பயிற்சிகளை அளிக்க வேண்டும். அவை படிக்கும்பொழுதே கல்லூரியில் பயிற்றுவிக்கப்படவேண்டும். தனித்திறன்களை வளர்ப்பதற்கு, தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும், தினந்தோறும் வரக்கூடிய செய்திகளை அறிந்துகொண்டு அதன் நன்மை, தீமைகளை ஆராய வைக்க வேண்டும். கணினியை எப்படி எல்லாம் நம் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம் என்பதை அறிய வைக்க வேண்டும், குழுவாக இணைந்து செயல்படுதலை ஊக்குவிக்க வேண்டும், தமக்கான எதிர்காலத்தை எப்படி நிர்ணயம் செய்வது என்பதை திட்டமிட கற்றுக்கொடுக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கைக் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனெனில் படித்த பின் ஒரு பெண் திருமண வாழ்க்கைக்குள் இணைந்து குடும்பத்தலைவி, அம்மா, மருமகள் என பல்வேறு பொறுப்புகளை பெறுகிறாள். அந்த பொறுப்புகளில் வெற்றியடைவதே அவளின் முதல் வெற்றி. இவற்றையெல்லாம் படிக்கும்பொழுதே கற்றுக்கொள்ளும் பொழுது எதிர்காலம் எளிமையானதாக இருக்கும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் வரவேண்டும். எந்ததொழிலும் செய்து முன்னேறலாம். அதற்கு திறமைதான் அவசியமே தவிர தகுதி அல்ல. தாங்கள் வெற்றி பெற பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது, நேர்மையாக நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அது போன்று படித்த படிப்புக்கேற்ற வேலை தான் பார்க்க வேண்டும் என்பதில்லை. நேர்மையான வருமானம் தரக்கூடிய தொழில் எதுவானாலும் செய்யுங்கள். என்ன படிக்கிறோம் என்பதை விட எப்படி படிக்கின்றோம் என்பதே முக்கியம். நாம் படிக்கும் கல்லூரி நமக்கு கற்றுத்தருவதிலும், நாம் கற்றுக்கொள்வதிலும் தான் இருக்கிறது நமது எதிர்காலம். எனவே அனைத்து கல்லூரிகளும் தொழிற்துறை சார்ந்த பாடத்திட்டத்தையும், படிக்கும்பொழுதே தொழிற் பயிற்சியையும் அளிக்க முன் வர வேண்டும்.