பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை
கோவை: ‘ஆங்கில பாடத்தைக் கண்டு மாணவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை; கவனமாக படித்தால் மதிப்பெண்களை அள்ளிக்குவிக்கலாம்’ என ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். ‘தினமலர்’ நாளிதழ், சென்னை ‘எஸ்.ஆர்.எம்., பல்கலை’ இணைந்து ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியை, பீளமேடு சி.ஐ.டி., கல்லூரி கலையரங்கில் நடத்தியது. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறும் வழிமுறை பற்றி ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை வசந்தா மணி பேசியதாவது: தமிழ் முதல்தாளில் தொடர்நிலைச் செய்யுள் பகுதியில் இடம்பெற்றிருக்கும் பெரு வினாக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த பகுதியிலிருந்து பொதுத்தேர்வில் அதிக கேள்விகள் கேட்கப்படக்கூடும். பல மாணவர்கள் தமிழ் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இதனால், நூறு மதிப்பெண் பெறும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர். அனைத்து பாடங்களையும் மிகத்தெளிவாக படித்து விட்டால், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கென தனியாக நேரம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு மதிப்பெண் வினாக்கள் பற்றி மாணவர்கள் கலந்துரையாடினால் மனதில் எளிதில் பதியும். உரைநடையில் ஆசிரியரின் கருத்தை மட்டுமே எழுத வேண்டும். சொந்த கருத்துக்களை எழுதக்கூடாது. மனப்பாட செய்யுள் பகுதியை நன்றாக படிப்பதுடன் பலமுறை எழுதிப்பார்ப்பது அவசியம். தமிழ் இரண்டாம் தாளில், வாக்கிய மாற்றத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.வழக்கத்தில் பயன்படுத்தும் மரபுத்தொடர் சொற்களே கேள்வித்தாளில் இடம் பெறுவதால், மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற முடியும். இலக்கணத்தில் அகப்பொருள், புறப்பொருள் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் வர வாய்ப்புள்ளது. செய்யுளை நன்றாக படித்து உரைநடைப்படுத்தி எழுத வேண்டும். துணைப்பாடக்கட்டுரையில் முதல் ஆறு கட்டுரைகளை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். பக்க தலைப்புகள், குறிப்புச்சட்டகத்தை குறிப்பிட வேண்டும். அழகாக கையெழுத்து இல்லையென்றாலும், தெளிவான கையெழுத்து இருக்க வேண்டும். இவ்வாறு தமிழாசிரியை வசந்தாமணி பேசினார். ஆங்கில ஆசிரியை ஜெயந்தி (பீளமேடு ஸ்ரீ கோபால்நாயுடு மேல்நிலைப்பள்ளி): ஆங்கிலம் என்றாலே பல மாணவர்களுக்கு அலர்ஜியாக இருக்கிறது. இந்தப் பாடத்தைப் பார்த்து யாரும் பயம் கொள்ள தேவையில்லை. இன்றைய சூழலில் ஆங்கிலம் மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. கூடுதல் கவனம் செலுத்தினால், இப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற முடியும். ஆங்கிலம் முதல்தாளில் இருந்து 55 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். சிறு வினாக்கள் பகுதியில் இருந்து 15 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்படும். மூன்று கட்டுரை (எஸ்ஸே) கேட்கப்படும். ஒரு கட்டுரைக்கு பதிலளித்தால் போதும். சிறப்பாக பதில் அளித்தால் 10 மதிப்பெண் கிடைக்கும். நேர்மறைச் சொல், எதிர்மறைச் சொல் உள்ளிட்ட பாடப்பகுதியில் இருந்து 25 மதிப்பெண்ணிற்கு கேள்வி கேட்கப்படும். ‘பேராகிராப்’பிற்கு ஐந்து மதிப்பெண் வழங்கப்படும். மீதி 30 மதிப்பெண்கள், செய்யுள், மனப்பாடம் பகுதியில் இருந்து கேட்கப்படும். மாணவர்கள் முதல்தாளில் முதல் நான்கு அல்லது கடைசி நான்கு பாடத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும். மூன்று மனப்பாடச் செய்யுளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆங்கிலம் இரண்டாம் தாளில் சரியான விடையைத் தேர்வு செய்தல், நோட் மேக்கிங், லெட்டர் ரைட்டிங், பர்சனல் லெட்டர், நேர்மறை, எதிர்மறை கூற்றுகளை நன்றாக படிக்க வேண்டும். கணிதம் - தேவராஜன் (ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி): மாணவர்கள் பலருக்கு கணிதம் என்றாலே கசக்கும். உண்மையில் கணிதம் மிகவும் எளிமையான பாடம். கணக்கு போடத் தெரிந்து கொண்டால், பொதுத்தேர்வில் நூறு மதிப்பெண் பெற்று விடலாம். கணிதப்பாடத்தைப் பொருத்தவரை முதலில் 10 மதிப்பெண் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். வரைபடம் மற்றும் ‘ஜாமெட்ரி’ பகுதியில் இருந்து 20 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்படும். இதற்கு பதிலளிக்க 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு பதிலளிக்க 65 நிமிடமும், இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கு 30 நிமிடமும் ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு 15 நிமிடத்திலும் பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் கடைசியில் 10 நிமிடம் விடைகள் சரியாக அளித்துள்ளோமா என்பதை மீண்டும் பார்க்க முடியும். நான்கு பொதுத்தேர்வுக்குரிய வினாக்களை எடுத்து என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை பார்த்துக் கொள்வது சிறந்தது. அறிவியல் - காஞ்சனா (ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி): நன்றாக படிக்கும் மாணவ, மாணவியருக்கு கூட அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண் பெற முடியுமா என்ற சந்தேகம் இருப்பதுண்டு. அறிவியலில் வெப்பவியல், நோய்களும், நோய் எதிர்ப்பு திறனும் ஆகிய பாடங்களில் இருந்து கண்டிப்பாக ஐந்து மதிப்பெண் கேள்விகள் வராது. இந்த பாடத்திலிருந்து இரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமே வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து 45 மதிப்பெண்ணிற்கும், வேதியியல் பாடத்தில் இருந்து 37 மதிப்பெண்ணிற்கும் கேள்விகள் கேட்கப்படும். மீதியுள்ள கேள்விகள் உயிரியல் பாடத்தில் இருந்து கேட்கப்படுபவை. வேதியியல் கேள்விகளுக்கு சமன்பாடுகளை மிகச்சரியாக எழுத வேண்டும். இயற்பியலில் விதிகளையும், உயிரியல் கேள்விகளுக்கு தாவரங்களின் பெயர், குடும்பம், தாவரங்களின் பாகங்கள் உள்ளிட்டவைகளையும் குறிப்பிட வேண்டும். சூலகம், அவரை விதை, நெல் விதை, விந்து செல்லின் அமைப்பு பற்றி கேட்டிருந்தால், படம் வரைந்து தெளிவாக பாகங்களை குறிக்க வேண்டும். தவளையின் வெளிப்புற அமைப்பு, நரம்பு மற்றும் செரிமான மண்டலம், தமனி செயல்படும் முறை, டி.என்.ஏ., மாதிரி குறித்து ஐந்து மதிப்பெண் கேள்வி கேட்கப்படலாம். அணுக்கரு பிளவு; இணைவு, அமிலம், காரம், உலோகம், அலோகம் இடையேவுள்ள வித்தியாசத்தை எழுதக்கூடிய கேள்விகள் கேட்கப்படும். சமூக அறிவியல் - கீதா (மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒப்பணக்காரவீதி): எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், கணிதம், அறிவியல் பாடத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சமூக அறிவியல் பாடத்துக்கு கொடுப்பது இல்லை. சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள், எந்த பாடத்திலும் இருந்து கேட்கப்படலாம். மார்ட்டின் லூதர் கிங், ராமகிருஷ்ணா மடம், பூமிதான இயக்கம் பற்றி படித்துக் கொள்ள வேண்டும். குடிமையியல் பாடத்தில் கூட்டாட்சி அரசு முறை, குடியரசு தலைவராக தகுதி, தேர்தல் நடத்தப்படும் முறை, இடைத்தேர்தல் எதற்காக நடத்தப்படுகிறது, குடியுரிமை, புவியியல் பாடத்தில் வண்டல் மண் பகுதி, கரிசல் மண் பகுதியை படிக்க வேண்டும். காலக்கோடு வினாவுக்கு எளிதாக விடையளித்து நல்ல மதிப்பெண் பெற முடியும். இதில் 1901 முதல் 1960ம் ஆண்டு வரை நடந்த நிகழ்வுகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.