மாணவர்கள் கடல்வழியாக சாகச பயணம்
வேதாரண்யம்: புதுச்சேரியில் இருந்து கடல் வழியாக பாய்மரப்படகில் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு, துணிகர சாகச பயணம் மேற்கொண்ட என்.சி.சி., மாணவர் படையினர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வந்தடைந்தனர். தேசிய மாணவர் படையினரிடம் குழு மனப்பான்மையை வளர்க்கவும், வீரசாகசம் செய்யவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், "சமுத்திர மாந்தம்" என்னும் தலைப்பில் கடல் சாகச பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த குழுவினர் கடந்த 25ம் தேதி புதுச்சேரியில் இருந்து ஆறுகாட்டுத்துறைக்கு கடலில் பாய்மரப்படகில் சாகச பயணம் புறப்பட்டனர். இப்பயணத்தை புதுச்சேரி கவர்னர் வீரேந்திர கட்டாரியா துவக்கி வைத்தார். ஐந்து நாள் கடல் பயணத்துக்கு பின், கடந்த 30ம் தேதி நாகை மாவட்டத்திலுள்ள ஆறுகாட்டுத்துறையை குழுவினர் வந்தடைந்தனர். கடலூர் ஜெயின் ஜோசப் கல்லூரி, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி, தரங்கம்பாடி பி.பி.எம்.எல்., கல்லூரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தேசிய மாணவர் படை கப்பற்பிரிவு மாணவர்கள் 30 பேர்களை, கர்னல் ஏ.கே.நாயர், கமாண்டர் முரளி, தேசிய மாணவர் படை உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். சாகச மாணவர் குழுவினர், இன்ஜின் பொருத்தப்படாத பாய்மர படகில் துடுப்புகள் உதவியுடன் 422 கி.மீ., தூரம் கடலில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த குழுவினரை ஆறுகாட்டுத்துறை கப்பற்படை முகாம் கமாண்டர் தங்கா தலைமையில் அதிகாரிகள் உபசரித்தனர். இதைத்தொடர்ந்து ஒருநாள் தங்கிய மாணவர்கள் நேற்று காலை 7 மணியளவில் பாய்மரப்படகில் மீண்டும் புறப்பட்டனர். நாகை, காரைக்கால், தரங்கம்பாடி, கடலூர் வழியாக புதுச்சேரியை ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று, சாகச குழுவினர் அடைகின்றனர்.