உள்ளூர் செய்திகள்

கேம்பஸ் இன்டர்வியூக்களில் மிளிரும் எக்ஸ்.எல்.ஆர்.ஐ.,

இந்தியாவின் புகழ் பெற்ற மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் ஒன்று ஜாம்ஷெட்பூரிலுள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ., உலகையே நிதிச் சிக்கல் அச்சுறுத்தி வரும் நிலையிலும்கூட இதில் பயிலும் மாணவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை தருவதில் கடும் போட்டியே நிலவி வருகிறது. இந்த ஆண்டு இந்நிலை காணப்படமாட்டாது என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு இந்நிறுவன மாணவர்களை பணிக்கு எடுத்துக் கொள்வதில் கடும் போட்டியே நிலவியது. வேலையுடன் கவர்ச்சிகரமான பல சலுகைகளும் தரப்பட்டன என்பது தான் இதில் சிறப்பு அம்சமாகும். பொதுவாக பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்குத் தரப்படும் 2 மாத பன்னாட்டு உதவித் தொகை இந்த ஆண்டும் தரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். சராசரி உதவிப் பணம் 55 சதவீத வளர்ச்சி பெற்று 48 ஆயிரத்திலிருந்து 85 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ரூ.ஒரு லட்சத்துக்கு அதிமாக உதவித் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 14லிருந்து 45 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச வாய்ப்புகளைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 5லிருந்து 22ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டு உதவிப் பணம் ரூ.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக குறைந்துள்ளது என்றாலும் பிற கல்வி நிறுவனங்களில் இது கிட்டத்தட்ட முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள சூழலில் இது பாசிடிவான அம்சமாகவே கருதப்படுகிறது. கடந்த ஆண்டை விட கூடுதலாக 32 நிறுவனங்கள் இந்த ஆண்டு கேம்பஸ் பணி வாய்ப்பு தந்திட வந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக இங்கு முகாமிடும் லேமென் பிரதர்ஸ், ரோபோ பாங்க், கேலான் பாங்க் போன்ற நிறுவனங்கள் எதிர்பார்த்த மாதிரியே இந்த ஆண்டு கேம்பஸ் வாய்ப்புகள் தர கலந்து கொள்ளவில்லை. வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்ஞ்கு ஆசியா, மே.ஆசியா பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் அதிகமான பணி வாய்ப்பாளர்கள் இங்கு பயிலும் மாணவர்களில் 27 பேர்களுக்கு இன்டர்ஷிப் வாய்ப்புகளை இந்த ஆண்டு தந்துள்ளனர். உதவித் தொகைகளில் அதிகபட்ச வாய்ப்பை அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டில் இயங்கும் ஒரு வங்கியும், இந்தியாவின் அதிக பட்ச வாய்ப்பை மும்பையில் இயங்கும் ஒரு வங்கியும் தந்துள்ளன. உலக அளவில் மிகப் பெரிய பங்கு மூலதன தனியார் நிறுவனமாகத் திகழும் கார்லைல் குழுமம் இங்கு பயிலும் மாணவர்களையே தனது இலக்காகக் கொண்டுள்ளது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த ஆண்டு கார்பன் விற்பனை நிறுவனமான கான்டார் சி2எப், எம்.சி.எக்ஸ்., பிராண்ட் கன்சல்டிங் கம்பெனி போன்றவையும் பணி வாய்ப்புகளை வழங்க இக் கல்வி நிறுவனத்திற்கு வந்திருந்தன. நிதி, மார்க் கெட்டிங் என்னும் 2 துறைகளையும் இணைந்த நிர்வாகவியல் படிப்புகளை எக்ஸ்.எல். ஆர்.ஐ., தருவதால் தான் இந்த மாணவர்களுக்கு சர்வதேச அளவில் மதிப்பும் மரியாதையும் கிடைப்பதாகவும், அதிக கிராக்கி உள்ளதாகவும் இக் கல்வி நிறுவனத்தின் கல்வியாளர்கள் கருதுகிறார்கள். இதனால் தான் சர்வதேச நிதிச்சிக்கல் இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை எவ்விதத்திலும் அச்சுறுத்தாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்