உள்ளூர் செய்திகள்

ஓவியத்துறை: அரசு கலைக்கூடங்களை அமைக்குமா?

ஓவியர்களின் திறமைகளை அறிந்து அவர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது குறைந்து வருகிறது. அறிவியல் வளர்ச்சியால், எங்கு பார்த்தாலும் பிளக்ஸ் போர்டு மயமாகி விட்டதால் ஓவியங்களின் பயணம் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளன. ஓவியர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக திருப்பூரில் அரசு கலைக்கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே அரசு கவின் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் 80 மாணவ, மாணவியர்கள் ஓவியர்களாக கல்வி பயின்று கல்லூரிகளில் இருந்து வெளி வருகின்றனர். தமிழகத்தில் குறைந்தது 2 லட்சம் ஓவியர்கள் உள்ளனர்.  இவர்களில் சிலர் ஓவிய கல்லூரிகளில் படித்தவர். பெரும்பாலானோர் பழக்கத்தின் அடிப்படையில் ஓவியர்களாக மாறியவர்கள். திருப்பூர் மாவட்டத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஓவியர்களை ஊக்குவிக்கும் கல்லூரியும், பயிற்சி மையங்களும் இங்கு கிடையாது. இதனால், திறமை வாய்ந்த ஓவியர்கள் கூட ஓவியம் குறித்த முழுமையை அடைய முடிவதில்லை. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஓவியம் வரைவதில் கை தேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை வழிநடத்தி செல்ல, தகுந்த ஓவிய ஆசிரியர் இருப்பதில்லை. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் அரசு கலைக்கூடம் அமைத்து அதன் மூலம் ஓவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டால், அதன் வாயிலாக ஓவியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுதவிர, அவர்களின் படைப்புகள் விற்பனை செய்யப்பட்டால் வருவாயும் கிடைக்கும். இதனால், திறன் வாய்ந்த ஓவியர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். இது குறித்து ஓவியர் சிராஜ் கூறுகையில், "திருப்பூரில் திறமை வாய்ந்த ஓவியர்கள் பலர் உள்ளனர். படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்களும் ஓவியத்தில் சாதனை படைத்து வருகின்றனர். இவர்களை ஊக்கவிக்க கலை பயிற்சி மையம் என்பது கிடையாது. இதனால், ஓவியர்களின் திறன் மற்றும் படைப்புகள் பாதிப்படைந்துள்ளது" என்றார். வண்ணங்களை குழைத்து வார்ப்பதில் உருவாகும் ஓவியம் என்றுமே அழியாதது. அதனை படைக்கும் ஓவியர்களை உருவாக்கினால், காலத்தால் அழிக்க முடியாத பல இடங்கள் ஓவியங்கள் மூலம் உயிர் பெறும். அதற்கான, முயற்சியின் ஒரு பகுதியாக திருப்பூரில் அரசு கலைக்கூடம் அமைய வேண்டும் என்பதே ஓவியர்கள் மற்றும் திறமை வாய்ந்த இளம் ஓவியர்களின் கருத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்