தற்காப்புக்கலையில் தடம் பதிக்கும் அரசுப்பள்ளி
உடுமலை: பள்ளி மாணவர்களுக்கு குறிப்பாக மாணவியருக்கு தற்காப்பு கலை அவசியம் என்பதை உணர்ந்து பல பள்ளிகளிலும், பல்வேறு கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் அரசுப்பள்ளிகளும் சாதிக்கும் வகையில் உடுமலை போடிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் சிறுவர்களை குறி வைத்தே பல்வேறு வன்கொடுமைகள் நிகழ்ந்து வரும் இச்சமயத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அவர்களே பொறுப்பு என்ற நிலை உருவாகியுள்ளது. வெளியுலக அனுபவம் இல்லாமல் பள்ளிக்கூடத்தையும், வீட்டையுமே தங்களின் உலகமாகக்கொண்டுள்ள குழந்தைகளுக்கு ஆபத்து நேரும் சமயங்களில் தங்களை தற்காத்துக்கொள்ள தற்காப்புக்கலைகள் அறிந்து வைத்துகொள்வது அவசியமாகியுள்ளது. தற்போது பல்வேறு தனியார் பள்ளிகளில், தற்காப்புக்கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகளிலும் சிறு வயது முதல் இளம் பருவம் வரை மாணவர்கள் படிக்கின்றனர். எனினும் இதுபோன்ற கலைகளை மாணவர்களுக்கு கற்பிக்க அரசு முன்வரவில்லை. இருப்பினும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் மாணவர்களை மாநில மற்றும் மாவட்ட அளவிலும் பழங்கால கலைகளில் வெற்றி பெறச்செய்யும் சில அரசுப் பள்ளிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் உடுமலை போடிபட்டி அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் 163 மாணவ மாணவியர் கல்வி கற்கின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை அவசியம் எனக்கருதி பள்ளியின் சார்பில் கராத்தே பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு பயிற்சி கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விருப்பமுள்ள மாணவர்களுக்கு வாரம் இருமுறை ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது வரை 11 மாணவியர், 23 மாணவர்கள் இப்பயிற்சி பெற்று வருகின்றனர். அடிப்படை கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கராத்தேவில் முதல் கட்ட போட்டியான மாவட்ட போட்டி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளதால் மாணவர்கள் அப்போட்டிகளுக்கு தயாராகி வருகின்றனர். கராத்தே பயிற்சியாளர் செந்தில் ஆறுமுகம் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் போது சில வரைமுறைகளின்படி பயற்சியளிக்கப்படுகிறது. அதில் காரத்தே கற்றுக்கொடுப்பதற்கு மாணவர்களின் உடல்நிலையை தயார்படுத்த வேண்டும். அதன் பொருட்டு கராத்தே பயிற்சிக்கு முன்பு யோகாசன பயற்சியளிக்கப்படுகிறது. மனதளவிலும் மாணவர்களை ஒருநிலைப்படுத்த யோகா பயிற்சியளிக்கப்படுகிறது. தற்போது இப்பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுவது வலிமையான கராத்தே என்பதாகும். இதல் உடலின் பலத்தை முழுமையாக வெளிக்கொண்டு வருதல், எதிரியின் பலம் அறிந்து அளவான பலத்தை மட்டும் வெளிப்படுத்துதல் போன்ற இருமுறைகள் கற்றுக்கொடுக்கப்படும். மனதளவிலான பலத்தை முழுமையாக பெறும்போது மட்டுமே உடலின் முழுமையான சக்தியையும் வெளிப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். பள்ளி தலைமையாசிரியர் லதா கூறியதாவது: தற்போது அரசுப்பள்ளிகளிலும் இதுபோன்ற தற்காப்புக்கலைகள் கற்றுக்கொடுப்பது அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் இக்கலைகள் கற்றுக்கொடுப்பதனால் மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பதோடு, கலைகளும் அழிவிலிருந்து மீட்டெடுக்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் தற்காப்புக்கலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசுப்பள்ளிகளின் மீது தனித்த ஆர்வம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.