உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்ட கல்விச் செய்திகள்

மாவட்ட அறிவியல் கண்காட்சி ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் மாவட்ட பள்ளி கல்வி துறை, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் மாவட்ட அறிவியல் கண்காட்சி நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கண்காட்சியில் 100 அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன. அறிவியல் நாடகம், கணித கருத்தரங்கம், மாதிரி பாராளுமன்றம், வினாடி வினா, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற தலா 10 அரசு, தனியார் பள்ளிகளுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கபரிசு, சான்றிதழ்கள், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. தனிப்போட்டிகளில் வென்ற 10 மாணவர்களுக்கும் பரிசு,சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஒன்றியங்களுக்குட்பட்ட தொடக்க கல்வி பள்ளிகளில் வாசிப்பு திறன் குறைவுடைய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் கிருஷ்ணன்கோவிலில் நடந்தது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பால்ராஜ் பேசுகையில், "தொடக்க கல்வி துறை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வாசிக்க தெரியாத மாணவர்களே இல்லை என்ற நிலை வரவேண்டும். மாணவர்களது கல்வி தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த கல்வியாண்டு முடிவதற்குள் அனைத்து மாணவர்களும் வாசிக்கவும், கணிதம் போடவும் தெரிந்துதான் அடுத்த வகுப்பிற்கு செல்வதை உறுதிசெய்ய வேண்டும்" என்றார். பட்டயப்படிப்பிற்கு உதவித் தொகை சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் செயல்படும் சமுதாய கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் ரூ.52.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கிராம மாணவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் இக்கல்லூரி உள்பட 2 கல்லூரிகளுக்கு மட்டுமே பல்கலைக்கழக மானிய குழு நிதி ஒதுக்கீடு வழங்கி உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எவ்வித கல்விக் கட்டணமும் இன்றி காளான் வளர்ப்பு குறித்த ஓராண்டு பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக மாதம் ரூ.1000 வீதம் பத்து மாதங்களுக்கு வழங்கப்படும். ரெங்கநாயகி கல்லூரியில் வளாகத் தேர்வு வெம்பக்கோட்டை: சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் இன்ஜினியரிங் கல்லூரியில் சென்னை எச். சி. எல். நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. நிறுவனத்தின் மனிதவள நிர்வாகி நரேஸ் தலைமையிலான குழுவினர் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனாய்வு தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் மாணவர்களை தேர்வு செய்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் காரியாபட்டி: காரியாபட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மற்றும் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்