நம் வெற்றிக்கு உதவியவர்களை மறக்கக்கூடாது
கோவை: கோவை அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் பல்கலையின் 26வது பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கேரள கவர்னர் சதாசிவம் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பல்கலைக்கழகம் இது. சமூகத்தின் தேவை அறிந்து மாணவிகளுக்கு உரிய கல்வி இங்கு கற்பிக்கப்படுகிறது. அதனால், இங்கு பயின்ற மாணவிகள் உலக அளவில் எங்கு சென்றாலும் நமது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் கடைப்பிடித்து சிறந்தவர்களாக விளங்குகின்றனர். வெற்றி அடைய இரண்டு வழிகள் உள்ளன. முதலில் வெற்றிக்கான வழியை கண்டு பிடிக்க வேண்டும். பிறகு அதை திறமையான முறையில் செயல்படுத்த வேண்டும். நம் மனம் சொல்வதை சரியாக செயல்படுத்த வேண்டும். நம்மால் முடியும் என்பதை உணர்ந்து, நேர்மையாக, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியடைந்து விடலாம். நம் வெற்றிக்கு உதவியவர்களை மறக்க கூடாது. நீங்கள் திறமையுடன் கடுமையாக உழைத்ததின் பயனாகத்தான் இன்றைக்கு உயர் கல்வியில் பட்டம் பெற்று, உயர்ந்த நிலையை அடைந்து இருக்கிறீர்கள். இனி உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். இவ்வாறு கவர்னர் சதாசிவம் பேசினார்.