நைஜீரியாவில் மிதக்கும் மூன்றடுக்கு பள்ளி
லாகோஸ்: ’தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்’ என்ற பாடல், மீனவர்களுக்கு மட்டுமல்ல, நைஜீரியாவில் மகோகோ என்ற பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் ரொம்பவே பொருந்தும். கடல் மட்டத்தை விட, தாழ்வான இப்பகுதியில், அவ்வப்போது மழை வெள்ளம் சர்வசாதாரணமாக சூழ்ந்து குடியிருப்புகளை வாரிச் சுருட்டி செல்வது வாடிக்கை. அதனால், இங்குள்ள 2.50 லட்சம் மக்கள், மூங்கில் தட்டிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு, ஓடத்தை உபயோகிக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக நீரிலேயே வசித்து வரும் இவர்களுக்கு, உலக வெப்பமயம் காரணமாக, கடல் மட்டமும் உயர்ந்து, தண்ணீர் காட்டுகிறது. இந்த சோகத்திலும், அவர்களில் ஒருவரான, குன்லே அதேயேமி என்கிற ஆர்க்கிடெக்ட், சூரிய சக்தி மூலம் இயங்கும், மூன்றடுக்கு பள்ளியை கட்டியுள்ளார். பிளாஸ்டிக் டிரம்களால் உருவாக்கப்பட்ட இந்த பள்ளி மூலம், குழந்தைகள் கல்வி அறிவு பெற்று, பொருளாதார வளர்ச்சி காண்பார்கள் என்பது இவரது நம்பிக்கை. அடுத்து, இவர் மிதக்கும் கழிப்பிடம், குடிநீர் வசதி, உள்ளிட்டவற்றையும் செய்ய திட்டமிட்டுள்ளாராம். இது எப்படி இருக்கு?