உள்ளூர் செய்திகள்

அரசு கலைக்கல்லூரியாக மாற்ற எதிர்பார்ப்பு!

வால்பாறை: வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை, அரசுக்கல்லுாரியாக மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு அரசு கலைக்கல்லுாரி இல்லாததால், 100 கி.மீ., தொலைவில் உள்ள கோவையில் தான் மாணவர்கள் சென்று படிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க முடியாமல் பரிதவித்தனர். இந்நிலையில், வால்பாறை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த 2006ல், வால்பாறையில் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை துவங்கியது. நகரின் மத்தில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்லுாரி வகுப்பறை, நுாலகம், கணினி அறை, ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. இக்கல்லுாரியில் தற்போது 1,247 மாணவர்கள் படித்து வருகின்றனர். வால்பாறையைத்தவிர, ஆழியார், கோட்டூர், உடுமலை, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்தும் இந்தக்கல்லுாரியில் மாணவர்கள் படித்து வருகின்றனர். வால்பாறை கல்லுாரியில் ஆதிவாசி மாணவர்களும் அதிக அளவில் படித்து, தற்போது பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லுாரியாக, இக்கல்லுாரி செயல்படுவதால், ஏழை, எளிய மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிக்கின்றனர். எனவே, தமிழத்தின் மிகவும் பின் தங்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வால்பாறையில் செயல்படும், இக்கல்லுாரியை (உறுப்புக்கல்லுாரி), அரசுக்கல்லுாரியாக மாற்ற, தமிழக முதல்வர் உத்தர விடவேண்டும் என்பது, அக்கல்லுாரி மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்வாசனிடம் கேட்ட போது, வால்பாறையில் செயல்படும் கல்லுாரி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லுாரி தான். இந்தக்கல்லுாரி அரசு கல்லுாரியாக மாற்றுவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைக்கு, அது உறுப்புக்கல்லுாரியாகவே தொடர்ந்து செயல்படும். மலைப்பகுதியில் செயல்படும் இக்கல்லுாரிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்