திருச்சியில் ஐ.ஐ.ஐ.டி., மாணவர்கள் உண்ணாவிரதம்
திருச்சி: அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்திடம் இருந்து, ஐ.ஐ.ஐ.டி.,யை விலக்கி, காஞ்சிபுரம் ஐ.ஐ.ஐ.டி.,யுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன், கொட்டும் மழையில், மாணவ, மாணவியர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், அலகாபாத், லக்னோ, புனே, மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் திருச்சி உட்பட, 20 இடங்களில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி எனப்படும் ஐ.ஐ.ஐ.டி.,க்கள் செயல்படுகின்றன. 2012ம் ஆண்டு, திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலை வளாகத்தில், ஐ.ஐ.ஐ.டி., துவங்கப்பட்டது. திருச்சி, ஐ.ஐ.ஐ.டி.,யின் இயக்குனராக, அண்ணா பல்கலைக் கழக டீன் செந்தில்குமார், உள்ளார். இங்கு, பி.டெக்., எம்.டெக்., பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் துவங்கப்பட்ட, பி.டெக்., பாடப் பிரிவில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 12 மாணவியர், 60 மாணவர்கள் என, மொத்தம், 72 பேர் படிக்கின்றனர். நேற்று காலை, திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்த பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர், நுழைவாயிலில் அமர்ந்து, கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐ.ஐ.ஐ.டி., மாணவர்கள் கூறியதாவது: ஸ்ரீரங்கம், ஐ.ஐ.ஐ.டி., தமிழக அரசின் கட்டுப்பாட்டில், அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதுமான கட்டட வசதி இல்லை. பி.டெக்.,எம்.டெக்., பிரிவுகளுக்கு என மொத்தம், 11 பேராசிரியர்களே பணிபுரிகின்றனர். பாடம் சார்ந்த புத்தகங்கள் நுாலகத்தில் இல்லை; விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை; போதிய அளவு உணவு கிடைப்பது இல்லை. வெளி மாநிலத்தைச் சேர்ந்த பி.டெக்.,எம்.டெக்., பயிலும் மாணவர்களுக்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்தில் செயல்படுவதால், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஸ்ரீரங்கம் ஐ.ஐ.ஐ.டி.,க்கு தனி கட்டடம் ஒதுக்கி, கூடுதலாக பேராசிரியர்கள் நியமித்து, துறை சார்ந்த புத்தகங்கள் வழங்க வேண்டும். அண்ணா பல்கலை நிர்வாகத்திடம் இருந்து விலக்கி, காஞ்சிபுரம், ஐ.ஐ.ஐ.டி.,யுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.