அரசுக் கல்லூரி என்.எஸ்.எஸ்., முகாம்
கோவை: அரசு கலைக் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கண்ணம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட இடங்களில் சுத்தம் செய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒரு வாரம் மேற்கொண்டனர். கோவை அரசு கலைக் கல்லுாரியிலுள்ள அலகு - 1, என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு கண்ணம்பாளையம் பேரூராட்சியில் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. மொத்தம், 76 என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு காலையில் தியான பயிற்சியும், மதியம் கராத்தே பயிற்சியும் தினமும் அளிக்கப்பட்டது. கோவில் வளாகங்களை துாய்மைப்படுத்தல், ரோட்டிலுள்ள முட்புதர்களை அகற்றுதல், கழிவறை, மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். நிறைவு விழாவில், கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அலுவலர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.