உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் ’ஆப்சென்ட்’பள்ளி மாணவர்கள் மறியல்

வேலுார்: வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 248 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கணக்கு ஆசிரியர் மதன், தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் ஆகிய இருவரும், தலைமை ஆசிரியை சூரியசெல்வியை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன், மாணவர்களின் கல்வி பதிவேடுகளை சரிவர பராமரிக்காதது தொடர்பாக, மதன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும், விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியை, மெமோ கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து, இரண்டு ஆசிரியர்களும் பணிக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதனால், படிப்பு பாதிக்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திரண்டு, திருப்பத்துார் - புதுப்பேட்டை சாலையில், நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார், விரைந்து சென்று, மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்புக்கு சென்றனர். மாணவர்கள் போராட்டத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்