விலங்கியலில் சதம் எடுப்பது கடினம்
உடுமலை: உயிரியல் பாடத் தேர்வில், விலங்கியல் பிரிவில் எதிர்பாராத வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதால், சதம் எடுப்பதும் கடினம் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. மொழிப் பாடங்கள், வேதியியல், கணிதம் பாடங்களை தொடர்ந்து, மருத்துவ படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் கணக்கிடும் உயிரியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது. இது தவிர, வணிகக் கணிதம், தாவரவியல், வரலாறு பாடங்களுக்கான தேர்வுகளும் நேற்று நடந்தன. உடுமலையிலுள்ள, 15 தேர்வு மையங்களில், 1,207 பேர் உயிரியல் தேர்வு எழுதினர்; 224 பேர் வரலாறு, 59 பேர் தாவரவியல், 192 பேர் வணிகக் கணிதத்தேர்வும் எழுதினர்; தனித்தேர்வர்கள் 151 பேர் வரலாறு, 34 பேர் வணிகக் கணிதமும் எழுதினர்; மொத்தமாக தனித்தேர்வர்களில் 49 பேர், மாணவர்கள் 23 பேர் தேர்வுக்கு ஆப்சென்ட்&' ஆகினர். உயிரியல் பாடத்தேர்வு கடினமாக வந்ததால், மாணவர்கள் ஏமாற்றத்துடனேயே தேர்வு எழுதினர்.அமர்கணபதி: தாவரவியல் பிரிவு வினாக்கள் மட்டுமே எளிமையாக இருந்தது. விலங்கியல் பிரிவில், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமே, எளிதாக விடை எழுதும் அளவில் இருந்தன. அதிலும் ஓரிரண்டு வினாக்கள் குழப்பமாகவே கேட்கப்பட்டிருந்தன.வழக்கமாகவே தாவரவியல் எளிமையாகவும், விலங்கியல் பிரிவு கடினமாகவும் வினாக்கள் கேட்கப்படும். இம்முறை, மிகவும் கடினமானதாகவே வந்ததால், அனைவருக்கும் எதிர்பார்த்த மதிப்பெண் வருமா என்பதே சந்தேகம்தான்.நந்தகுமார்: விலங்கியல் பிரிவில், மூன்று மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. வினாக்களை நன்றாக புரிந்திருந்தால் மட்டுமே விடை எழுத முடியும் என்ற அளவில் இருந்தது. பத்து மதிப்பெண்ணுக்கு எதிர்பாராத வினாக்கள் அதிகமாக கேட்கப்பட்டிருந்தன. தாவரவியல் பாடம் எளிமையாக இருந்ததால், இப்பிரிவு வினாக்களுக்கு யோசித்து விடை எழுத முடிந்தது. வணிகக் கணிதம் முரளி: இம்முறை கலைப்பிரிவு பாடங்கள் அனைத்துமே கடினமாகவே வருகிறது. ஒவ்வொரு பாடமும் எங்களுக்கு ஏமாற்றத்தையே வழங்குகிறது. கணக்குகள், எதிர்பார்த்த பயிற்சி செய்த கணக்குகள் குறைந்த எண்ணிக்கையில் கூட வரவில்லை. இதனால், எழுதிய விடைகளை சரிபார்க்கவும் நேரமில்லாமல் விடை எழுதிவிட்டு வந்துள்ளோம். சன்ஜித்குமார்: வணிகக் கணிதமும் வழக்கமாக கடினமான ஒரு தேர்வுதான். இருப்பினும், இம்முறை மாணவர்கள் எதிர்பார்க்காத வகையில் கடினமாக வந்துள்ளது. மாணவர்களை குழப்பும் வகையிலேயே வினாக்கள் இருந்தன. தேர்வில் நிச்சயம் சதம் பெறுவோம் என்ற திருப்தியாகவே சொல்ல முடியவில்லை. வரலாறு விதுன்சிங்: வரலாறு தேர்வு வழக்கம் போல மிகவும் எளிமையாக இருந்தது. பயிற்சி எடுத்திருந்த வினாக்கள் வந்ததால், விரைவாக விடை எழுத முடிந்தது. தவிர, ஒரு மதிப்பெண் உட்பட அனைத்து பகுதிகளிலும் எளிமையான வினாக்கள் என்பதால், மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினோம்.