இன்டர்நெட் பயன்பாட்டில் சாதிக்கப்போகுது இந்தியா
புதுடில்லி: வரும் 2013ம் ஆண்டு, அதிகளவில் இன்டர்நெட் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் பெறும் என, ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் சந்தை நிலவரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும், ‘பாரஸ்டர்’ நிறுவனம், ‘குளோபல் ஆன்-லைன் பாப்புலேஷன் போர்காஸ்ட் 2008-2013’ என்ற தலைப்பில், இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வறிக்கை தகவல்கள்:உலகளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை வரும் 2013ம் ஆண்டு 220 கோடியாக அதிகரிக்கும். வரும் 2013ம் ஆண்டு, அதிகளவில் இன்டர்நெட் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாமிடம் பெறும். சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், முறையே, முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறும். கடந்தாண்டு, உலகளவில் இன்டர்நெட் பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை, 150 கோடியாக இருந்தது. இந்தியாவில் மட்டும், கடந்தாண்டு இன்டர்நெட் பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 5.20 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த நான்காண்டுகளில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 43 சதவீதத்தினர், ஆசியா மற்றும் அதன் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த ஆய்வு தகவலில் கூறப்பட்டுள்ளது.