சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு
புதுச்சேரியில் 8 மையங்களில் நேற்று நடந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் 1,582 பேர் பங்கேற்றனர்.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்பட 26 வகையான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தாண்டிற்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. புதுச்சேரியில் லாஸ்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி, மகளிர் பாலிடெக்னிக், காந்தி வீதி பெத்திசெமினார் பள்ளி, மிஷன் வீதி இமாகுலேட் பள்ளி, இதயா கல்லுாரி, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி உட்பட மொத்தம் 8 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்விற்கு 2,193 பேர் அழைக்கப் பட்டிருந்தனர்.காலை 9:30 முதல் 11:30 மணி வரை நடந்த தேர்வில் 1,590 பேரும், மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை நடந்த தேர்வில் 1,582 பேர் தேர்வு எழுதினர். காலையில் 603 பேரும், மதியம் 611 பேரும் தேர்வு எழுதவில்லை. தேர்வர்களின் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு, முகக் கவசத்துடன், தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.முன்னதாக தேர்வு அறையில் பணியாற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்டோருக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே பணிக்கு அனுமதிக்கப்பட்டனர்.தேர்வர்களின் வசதிக்காக கடலுார், விழுப்புரம், காரைக்கால் பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு பி.ஆர்.டி.சி., சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.