சிறந்த நுால் பரிசு எப்போது?
சென்னை:தமிழ் வளர்ச்சி துறையின் கடந்த ஆண்டுக்கான சிறந்த நுால் பரிசு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் நுாலாசிரியர்கள் உள்ளனர்.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 33 வகைப்பாடுகளில் சிறந்த நுால்களுக்கு ரொக்கப்பரிசும், தகுதி சான்றிதழும் வழங்கப்படுகின்றன. அதன்படி சிறந்த நுாலின் ஆசிரியருக்கு 30 ஆயிரம் ரூபாயும், பதிப்பாளருக்கு 10 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. 2021ம் ஆண்டு வெளியான நுால்களில் சிறந்த நுால்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியல் தயாரான நிலையில் இதுவரை பரிசு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 2022ம் ஆண்டு வெளியான நுால்களின் பரிசுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இந்த மாதம் 30ம் தேதி வரை நுால்கள் பெறப்படுகின்றன. இதனால் கடந்த ஆண்டு பரிசுக்கு நுால்கள் அனுப்பியோர் பரிசு வழங்கப்படும் தேதியை எதிர்நோக்கி உள்ளனர்.இதுகுறித்து, தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், அமைச்சரவை மாற்றத்தால் கடந்த ஆண்டுக்கான பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 2021, 2022ம் ஆண்டுகளுக்கான சிறந்த நுால் பரிசுகளை ஒரே விழாவில் வழங்குவோம் என்றனர்.