உயர்வுக்கு படி திட்டம் துவக்கம்
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், உயர்வுக்கு படி என்ற திட்ட முகாம் துவக்கப்பட்டது.இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேலைவாய்ப்பு துறை, தாட்கோ, சுகாதார துறை உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் வழிகாட்டப்பட்டது. இந்த முகாமில், 80 மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பயிலவும், 36 மாணவர்கள் பொறியியல் கல்லுாரியில் சேரவும், 65 மாணவர்கள் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலவும் பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக, வட சென்னையில் ஜூலை 1ம் தேதியும், தென் சென்னையில் 7ம் தேதியும் நடைபெற உள்ளது.