இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை
கரூர்: கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி தெரிவித்தார்.அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலை பிரிவுகளில் முழுநேர வகுப்பாக இசைக்கல்வி சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. 3 ஆண்டுகள் முறையான பயிற்சிக்கு பின் அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது, 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாதஸ்வரம், தவில் துறைக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. 12 வயதிற்கு மேல் 25 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் சேரலாம். மாணவர்கள் பெருமளவில் சேர்ந்து பயன்பெற குறைவான பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு 350 ரூபாய் மட்டும் பெறப்படுகிறது.தொலைவில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு இலவசமாக தங்கும் விடுதி வசதி மற்றும் அரசு பஸ்களில் இசைப்பள்ளிக்கு வந்து செல்வதற்கு இலவச பஸ் பயண அட்டையும் வழங்கப்படுகிறது. இசைக்கலை வளர இசைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் 400 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.