உள்ளூர் செய்திகள்

கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த ஆய்வு

தேனி: கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கல்வித்தரம் குறித்து இன்று (ஜன. 4ம் தேதி) முதல் ஆய்வு துவங்க உள்ளது. தனியார், மெட்ரிக் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும், மாணவர்களிடம் கூடுதல் கல்விக் கட்டணம், நன்கொடை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்த அரசு முடிவு செய்து, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், தனியார் பள்ளி கட்டண சீரமைப்பு கமிஷன் அமைத்துள்ளது. பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள், தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, கமிஷன் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் பள்ளிகளுக்கு, அரசே கட்டணம் நிர்ணயம் செய்ய உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் கமிஷன் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு தனியார், மெட்ரிக் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆய்வகம், நூலகம், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், மாணவர்களின் கல்வித்தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, பள்ளி கட்டண சீரமைப்பு கமிஷனுக்கு, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல், முதன்மை கல்வி அலுவலர்கள், கட்டண நிர்ணயத்திற்காக, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஆய்வு நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்